'ஒற்றைத் தாய்மார்களுக்கு அதிக ஆதரவு தேவை'

'ஒற்றைத் தாய்மார்களுக்கு அதிக ஆதரவு தேவை'

2 mins read
21715e28-7136-4fd1-a317-b2f5669dfc71
-
Google News Preferred Icon

ஒற்றைத் தாய்மார்களுக்கு அதிக ஆதரவு தேவை என்று அதிபர் ஹலிமா யாக்கோப் குரல்கொடுத்து இருக்கிறார். சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் 'எஸ்ஜி மாதர் இயக்கக் கொண்டாட்டம்' என்ற செயல்திட்டத்துடன் சேர்ந்து ஏற்பாடு செய்யப்பட்ட 'தோழிகளுடன் கூடிய கலந்துரையாடல்' என்ற மலாய் உரையாடல் நிகழ்ச்சியில் தனது கருத்துகளை அதிபர் பகிர்ந்துகொண்டார்.

மனநலப் பிரச்சினைகளுடன் போராடுவோரிடம் மேலும் கருணையுடன் சிங்கப்பூரர்கள் நடந்து கொள்ளவேண்டிய தேவை இருப்பதாக அதிபர் கூறினார்.

ஒற்றைத் தாய்மார்கள் பற்றி பாதகமான தப்பெண்ணங்கள் அதிகம் இருப்பதாகக் குறிப்பிட்ட திருவாட்டி ஹலிமா, ஒற்றைத் தாய்மார்கள் போன்றவர்களுக்கு நாம் அதிக ஆதரவு அளிக்க வேண்டுமென்றார்.

அவர்களிடம் உள்ள குறைகளைப் பார்க்காமல் நிறைகளைப் பார்த்து திறந்த மனதுடன் நாம் அவர்களுக்கு உதவ வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஓர் இனம், சமயம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற ஒரே மாதிரியான எண்ணத்தைப் போக்க வேண்டும் என்றும் அதிபர் வலியுறுத்தினார். ஒருவர் பெண் என்பதால் அவருடைய ஆற்றல் குறித்து சந்தேகப்படக் கூடாது என்றும் அதிபர் தெரிவித்தார்.

"மாதர்கள் நம்பிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். யாரும் தங்களைக் குறைத்து மதிப்பிட இடம்கொடுக்கக் கூடாது. அப்படி இடம்கொடுத்துவிட்டால் மாதர்கள் அப்படியே நடத்தப்பட ஊக்கம் கிடைத்துவிடும்," என்றார் அதிபர்.

வேலை, குடும்பம் இரண்டையும் சமாளிப்பது பற்றி பேசிய அதிபர், தியாகங்கள் தேவை என்றார்.

தன்னுடைய பிள்ளைகள், சிறார் களாக இருந்தபோது தொலைக்காட்சி பார்க்கக்கூட தனக்கு நேரம் இருந்தது கிடையாது என்று திருவாட்டி ஹலிமா குறிப்பிட்டார்.

இருந்தாலும் தன்னுடைய தாயாரும் கணவரும் நல்ல விதத்தில் தனக்கு ஆதரவு அளித்ததாகவும் அவர் கூறினார்.

மனநலம் என்பது குறிப்பாக மாதர்களைப் பொறுத்தவரை மிக முக்கியமானது என்பதை அவர் வலியுறுத்தினார்.

ஏராளமான பொறுப்புகளைச் சுமக்கும் மாதர்கள், மனநலத்தை அலட்சியப்படுத்திவிடவில்லை என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும் என்று அதிபர் தெரிவித்தார்.