ஆய்வு: நோயாளி பேசுவது, பாடுவது மூலமாகவும் கிருமி பரவும்

ஆய்வு: நோயாளி பேசுவது, பாடுவது மூலமாகவும் கிருமி பரவும்

2 mins read
d7d002ed-20a1-4e51-832d-14ac4e268832
-

கொவிட்-19 கிருமி தொற்றிய ஒருவர் இருமினால், தும்மினால் அருகில் உள்ள மற்றவருக்கு கிருமி பரவும் என்பது தெரிந்ததே.

ஆனால் அந்த நபர் வெளிவிடும் மூச்சில் இருந்தும் அவர் பாடும்போதும் பேசும்போதும் அவரிடம் இருந்து கிருமி பரவும் வாய்ப்புள்ளதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

சமூக பாதுகாப்பு இடைவெளி, முகக்கவசம் அணிவது, நல்ல காற்றோட்டமான இடவசதி போன்ற கிருமி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தேவை என்பதையே அந்த ஆய்வு முடிவுகள் உணர்த்துவதாக ஆய்வை நடத்தியவர்கள் கூறுகிறார்கள். இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் தலைமையில் தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

பேசுவது, பாடுவதன் மூலம் இரண்டு வகை கிருமித் துகள்கள் வெளியேறும் வாய்ப்புள்ளதாக ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

இவ்விரு செய்கைகளின் மூலம் வெளியாகக்கூடிய நுண்துளிகளில் அதிக கிருமிகள் இருக்க வாய்ப்பு உண்டு என்று என்யுஎஸ் யோங் லூ லின் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த தொற்றுநோய் வல்லுநர் பேராசிரியர் பால் தம்பையா தெரிவித்தார்.

இந்த ஆய்வுக்குத் தலைமை வகித்த என்யுஎஸ் வடிவமைப்பு, சுற்றுச்சூழல் பள்ளியைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் தாம் குவோங் வெய், தங்கள் குழு நடத்திய ஆய்வு மூலம், இத்தகைய ஒவ்வொரு செயலின் மூலமாகவும் எந்த அளவுக்குத் தொற்று பரவக்கூடிய ஆபத்து இருக்கிறது என்பதை மதிப்பிடுவதற்கான ஓர் அடிப்படை கிடைத்து இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்த ஆய்வு அறிக்கை, ஆகஸ்ட் 6ஆம் தேதி 'மருந்தகத் தொற்றுநோய்கள்' என்ற மருத்துவ சஞ்சிகையில் முதன்முதலாக வெளியிடப்பட்டது.

ஆய்வுக் குழு, 22 கொவிட்-19 நோயாளிகளைப் பரிசோதித்தது.

இவர்கள் பிப்ரவரி முதல் மார்ச் வரை தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

ஒரே நாளில் அவர்களிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பல்வேறு வகை பாடல்களை 15 நிமிடம் பாடும்படி அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

சிறார் புத்தகத்தைப் பார்த்து 15 நிமிடங்கள் உரக்கப் படிக்கும்படி அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்ட னர். அவர்களின் மூச்சுக் காற்று 30 நிமிடங்கள் சோதிக்கப்பட்டது.

பாடுதல், பேசுதல் மூலம் வெளியேறிய கிருமிகளின் அளவு நோயாளிகளைப் பொறுத்து மாறுபட்டு இருந்தது என்று இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.