'ஸ்போர்ட்ஸ் ஹப்' என்னும் சிங்கப்பூர் விளையாட்டு நடுவம், தனது உடற்பயிற்சிக் கூடங்களின் வருகையாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துகிறது. அதன் உள்ளரங்குகள், அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு, தொற்றுக்கு எதிரான மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பான நிர்வாகக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அதன்படி அங்கு வருகையளிப்போர் அனைவரும் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில், நிகழ்ச்சிக்கு முந்தைய பரிசோதனையில் தொற்று இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே அவர்கள் அரங்கத்தில் நுழையவும் அரங்க நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கவும் அனுமதிக்கப்படுவர்.
வருகையாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரங்கள், தொற்று பரிசோதனை செய்துகொண்ட விவரங்கள் யாவும் அவர்கள் உள்ளரங்கிற்குள் நுழைவதற்கு முன்னரே பதிவுசெய்யப்படும். இருப்பினும் அரங்கினுள் நுழையும்போது தடுப்பூசி போட்டதற்கான சான்றுகள் சரிபார்க்கப்படும்.
2009ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த அதாவது 12 மற்றும் அதற்கும் குறைந்த வயதுடைய, தற்சமயம் தடுப்பூசி குத்திக்கொள்ளத் தகுதிபெறாத பிள்ளைகள் அவர்கள் குடும்ப உறுப்பினருடன் நிகழ்ச்சிகளிலும் பயிற்சி வகுப்புகளிலும் கலந்துகொள்ளலாம் என்று சிங்கப்பூர் விளையாட்டு நடுவம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த பாதுகாப்பு நடைமுறை ஆகஸ்ட் 10ஆம் தேதி நடப்புக்கு வந்தது. அரசாங்கம் அண்மையில் அறிவித்த கட்டுப்பாட்டுத் தளர்வுகளை அடுத்து, ஸ்போர்ட்ஸ் ஹப்பின் உடற்பயிற்சி நிலையங்களுக்கு வருகை தருவோரை அனுமதிக்கும் வகையில் தொற்றுக்கு எதிரான அதன் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
இந்தப் புதிய நடவடிக்கையின்மூலம் விளையாட்டுத்துறையில் முகக்கவசம் அணியாமல் மேற்கொள்ளப்படும் கடுமையான பயிற்சிகள் அனுமதிக்கப்படும். ஆனால், அவர்கள் ஐந்து பேர் கொண்ட குழுக்களாகச் செயல்படவேண்டும். அத்துடன் அனைவரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கவேண்டும். அல்லது கொவிட்-19 சோதனை மூலம் தொற்றுப் பாதிப்பு இல்லையென்பதற்கான மருத்துவச் சான்று வைத்திருக்கவேண்டும்.
உள்ளூர்த்தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து இரண்டாம் கட்டத் தளர்வு அறிவிக்கப்பட்டபோது தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் கடுமையான உடற்பயிற்சி வகுப்புகள் மற்றும் தனிப்பட்ட குழுவாக மேற்கொள்ளும் உள்ளரங்கப் பயிற்சிகள் யாவும் அனுமதிக்கப்படவில்லை.
ஆனால், இப்போது ஸ்போர்ட்ஸ் ஹப்பின் புதிய விதிமுறைப்படி தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், கொவிட்-19 சோதனையில் தொற்று பாதிப்பு இல்லையென்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் இதுபோன்ற கடுமையான பயிற்சி நடவடிக்கைகளில் பங்குபெறலாம்.
சிங்கப்பூர் ஸ்போர்ட்ஸ் ஹப் அதன் ஓசிபிசி அகுவாடிக் சென்டர், ஓசிபிசி அரினா, ஸ்போர்ட்ஸ் ஹப் ஜிம், நீர் விளையாட்டு மையம் ஆகிய இடங்களில் ஐந்து பேர் கொண்டு குழுவாக முகக்கவசமின்றி மேற்கொள்ளப்படும் பயிற்சிகளுக்கு இப்போது அனுமதி அளிப்பதாகக் கூறியுள்ளது.

