ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதை தகாத நடவடிக்கைகளில் பயன்படுத்தி வந்த சீன நாட்டைச் சேர்ந்த இருவருக்கு வாடகைக்கு விட்ட சிங்கப்பூர் ஆடவர் ஒருவருக்குக் குடிநுழைவுக் குற்றத்தின் அடிப்படையில் 7 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முதல் பெண்மணிக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்திற்காகவும் இரண்டாம் பெண்மணிக்கும் அடைக்கலம் கொடுத்ததைக் கருத்தில் கொண்டும் 26 வயது ஷூ யீஷுயெனுக்கு அத்தண்டனை வழங்கப்பட்டது. 2 பெண்களும் காலங்கடந்து சிங்கப்பூரில் தங்கியிருந்தவர்கள்.
தெம்பனிசில் உள்ள அந்த வீட்டை நவம்பர் 4ஆம் தேதி 2019ல் காவல் துறையினருடன் சேர்ந்து சோதனை செய்ததாகக் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் நேற்று கூறியது.
விசாரித்தபோது ஷூ, அக்டோபர் 2019ல் வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது தெரியவந்தது.
அதன் பின் அதேயாண்டு அக்டோபர் 27ஆம் தேதி, ஷூ அந்த வீட்டை ஹுவாங் ஹவோயிங்கிடமும், ஹ லெய்யிடமும் வாடகைக்கு விட்டார். அவர் தொடர்ந்து உட்லன்ட்ல்ஸி இருந்த தம் வீட்டில் தங்கியவாறு தினமும் ஹுவோயிங்கிடமிருந்து $110ம் ஹுவிடமிருந்து $120ம் வாடகையாய் விதித்தார்.
வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன் குடிநுழைவு அனுமதியைச் சரிபார்க்காததால் ஷூ அந்தப் பெண்களுக்கு அடைக்கலம் கொடுத்து குடிநுழைவுக் குற்றத்துக்கு ஆளாகியுள்ளார் என ஐசிஏ கூறியது.
விசா அனுமதி முடிந்து தங்கியதுக்கு இரு பெண்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஐசிஏ வெளியிட்ட அறிக்கையில் வீட்டுரிமையாளர்கள் 3 அத்யாவசிய சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அது குறிப்பிட்டது.
வாடகைதாரர்களின் அசல் குடிநுழைவு அல்லது வேலை அனுமதியைச் சரிபார்க்க வேண்டும் அசல் கடவுச்சீட்டில் உள்ள அவர்களுடைய விவரங்களைக் குடிநுழைவு அல்லது வேலை அனுமதியுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டும்.
குடிநுழைவு அல்லது வேலை அனுமதியை வழங்கிய ஆணையத்துடன் வழங்கப்பட்ட அனுமதி காலத்தைச் சரிபார்க்க வேண்டும்.
உதாரணத்துக்கு, வேலை அனுமதிகளை மனிதவள அமைச்சுடன் சரிபார்க்க வேண்டும், மாணவர் அனுமதிச்சீட்டு போன்ற குடிநுழைவு அனுமதிகளை ஐ.சி.ஏயுடன் சரிபார்க்க வேண்டும்.
பொறுப்பில்லாமல் இம்மூன்றில் ஒன்றை மட்டும் சரிபார்ப்போருக்கும், தெரிந்தே காலங்கடந்திருப்போர் அல்லது கள்ளக்குடியேறிகளுக்கு அடைக்கலம் கொடுப்போருக்கும் குறைந்தது ஆறு மாதத்திலிருந்து இரண்டு ஆண்டு கால சிறை தண்டனையும் $6,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
அலட்சியமாக இம்மூன்றில் இரண்டை மட்டும் சரிபார்ப்போருக்கும், தெரிந்தே விசா அனுமதி முடிந்த அல்லது கள்ளக்குடியேறிகளுக்கு அடைக்கலம் கொடுப்போருக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொருவருக்கும் தலா $6,000 வரை அபராதம் 12 மாதம் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

