விருந்தினர்களை ஈர்க்க ஷங்ரிலா ராசா செந்தோசா இலவச பரிசோதனை
ஷங்ரிலா ராசா செந்தோசா ஹோட்டலில் தங்கும் விருந்தினர்கள் இன்னமும் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் அவர்களுக்கு நிகழ்வுக்கு முந்தைய கிருமிப் பரிசோதனையை இலவசமாக மேற்கொள்ள ஹோட்டல் நிர்வாகம் முன்வந்துள்ளது.
அங்குள்ள உணவு பானக் கடைகள் போன்ற வசதிகளை விருந்தினர்கள் பயன்படுத்த அது வகைசெய்யும்.
நேற்று தொடங்கி வரும் 19ஆம் தேதி வரை இலவசப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதார அமைச்சின் அனுமதிபெற்ற நிறுவனம் அவற்றை மேற்கொள்ளும் என்றும் ஹோட்டல் நிர்வாகம் கூறியது.
நிகழ்வுக்கு முந்தைய கிருமிப் பரிசோதனையில் தொற்றில்லை என்று சான்று காட்டினால்தான் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொள்ளாத விருந்தினர்கள் சுற்றுலா தலத்தின் வசதிகளைப் பயன்படுத்த முடியும்.
இலவசப் பரிசோதனைகளை வழங்குவதன் வழி ஹோட்டலில் தங்கும் எல்லா விருந்தினர்களுக்கும் அதன் பணியாளர்களுக்கும் பாதுகாப்பு குறித்த நிம்மதியும் உறுதியும் வழங்க நம்பிக்கை கொண்டுள்ளதாக ஹோட்டல் நிர்வாகம் கூறியது.
சின் சுவீ ரோட்டில் உள்ள பாலர் பள்ளியில் தொற்றுக் குழுமம்
எண் 54, சின் சுவீ ரோட்டில் உள்ள 'மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்' பாலர் பள்ளியில் நேற்று முன்தினம் புதிய தொற்றுக்குழுமம் அறிவிக்கப்பட்டது. அந்தத் தொற்றுக்குழுமத்தில் புதிதாக ஐந்து பேருக்கு கிருமித் தொற்று ஏற்பட்டதை சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் தெரிவித்தது.
அதன் வழி, தொற்றுக் குழுமத்தில் மொத்தம் ஆறு பேருக்குத் தொற்று உள்ளதாக அமைச்சு கூறியது.
'மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்' பாலர் பள்ளியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு விட்டதற்கான சான்றிதழ் அதன் வெளியே நேற்று ஒட்டப்பட்டிருந்தது.
இரண்டு நாட்களில் தொற்றுக் குழுமம் ஏற்பட்டுள்ள இரண்டாவது பாலர்பள்ளி அது.
கிரேத்தா ஆயர் சமூக நிலையத்தில் உள்ள 'சூப்பர்லேண்ட்' பாலர் பள்ளியில் தொற்றுக் குழுமம் உருவானதாக கடந்த 11ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது. ஐந்து பாலர்களுக்கும் பள்ளி ஊழியர் ஒருவருக்கும் தொற்று கண்டது. அங்கு முன்னெச்செரிக்கையாக எல்லா ஊழியர் களுக்கும் பாலர்களுக்கும் கிருமிப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் முன்னதாக கூறியது.

