கடந்த ஒன்றரை ஆண்டாக பெரிய அளவில் நேரடி நிகழ்ச்சிகளும் கூட்டங்களும் நடைபெறாது அவற்றுக்கான தேவை குறைந்துள்ள நிலையில், அவை நடைபெற்று வந்த முக்கிய பெரிய வளாகங்களில் ஒன்றான சிங்கப்பூர் எக்ஸ்போவின் சில பகுதிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
பொழுதுபோக்கு, விளையாட்டு உணவு, பானத் துறைகளைச் சேர்ந்த புதிய வசதிகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் எக்ஸ்போவில் அடுத்த சில வாரங்களில் புதிதாக 'கோ கார்ட்' பொழுதுபோக்கு காரோட்டத் தடம், உட்புற பேட்மிண்டன் அரங்கம், 'டிம்பர்+' நிறுவனம் நடத்தும் உணவு நிலையம் போன்றவை திறக்கப்பட உள்ளன என்று அறிவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் கூறியுள்ளது.
புதிய வசதிகளை அமைக்கும் பணி கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கியதாகக் கூறப்பட்டது.
எக்ஸ்போ கட்டடத்தின் 4ஆம் முதல் 6ஆம் கூடங்களுக்கு வெளியில் உள்ள வெளிப்புற கார்நிறுத்துமிடங்களில் ஒன்றில், 'டிம்பர்+' உணவு நிலையத்தை அமைப்பதற்காக புதிய கட்டடம் கட்டப்பட்டது.
முந்நூறு இடங்களைக் கொண்ட மற்றுமொரு கார் நிறுத்துமிடம், 'கோ கார்ட்' கார்த்தடமாக மாற்றப்பட்டுள்ளது. கேஎஃப்1 கார்ட்டிங் எனும் நிறுவனம் அந்தப் பொழுதுப்போக்குத் தடத்தை நடத்தும்.
அந்நிறுவனம் ஏற்கெனவே கிராஞ்சியில் உள்ள சிங்கப்பூர் குதிரைப் பந்தய மன்றத்தில் இதே போன்ற 'கோ கார்ட்' ஓட்டத் தடத்தை நடத்தி வருகிறது.
சிங்கப்பூர் எக்ஸ்போவில் தொடங்கப்படும் புதிய தடத்தில் சுமார் '15 கோ கார்ட்' வாகனங்கள் வரை இயங்க வசதியுள்ளது என்றும் ஓராண்டுகால தற்காலிக உரிமம் பெற்று தடம் நடத்தப்பபடும் என்று அறிவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
சிங்கப்பூரின் கிழக்குப் பகுதிஙயில் உள்ள முதல் 'கோ கார்ட்' தடம் இதுவாக இருக்கும் என்று 'கேஎஃப்1' நிறுவனத்தை நடத்தும் அரினா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரிச்சர்ட் டான் கூறினார்.
புதிய 'கோகார்ட்' தடத்தை அமைப்பதில் கிட்டத்தட்ட $1 மில்லியனை முதலீடு செய்துள்ளதாகவும் அதனை அமைக்க ஒரு மாதம் பிடித்ததாகவும் அவர் கூறினார். அத்துடன், சிங்கப்பூர் எக்ஸ்போ வின் ஆறாவது கூடத்தில் அமைக்கப்படும் புதிய பேட்மிண்டன் அரங்கத்தை திரு டான் முன்னெடுத்துள்ளார்.
அரங்கத்தில் விளையாடுவதற்கு 22 கூடங்கள் அமைக்கப்படும். சிங்கப்பூரின் ஆகப் பெரிய பேட்மிண்டன் அரங்கமாக இது இருக்கும் என்று திரு டான் தெரிவித்தார்.

