வளர்ந்து வரும் தொழில் துறைகளின் மனிதவளத் தேவைகளைச் சமாளிக்க நான்கு புதிய வேலை - கல்வித் திட்டங்கள் அறிமுகம் காண உள்ளன.
அடுத்த மூன்றான்று காலகட்டத்தில் இத்திட்டத்தில் மொத்தம் 300 இடங்கள் வழங்கப்படும். இதில் மூன்று திட்டங்கள் அக்டோபர் மாதத்தில் தொடங்கவுள்ளன.
பணியில் இருந்தபடியே உயர் கல்வி பெற இந்த வேலை - கல்வித் திட்டம் வகை செய்கிறது.
உயர் கல்வி நிலையங்கள், வர்த்தக சங்கங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டங்களில் 32,000க்கும் மேற்பட்ட, பெரும்பாலும் சிறிய அல்லது நடுத்தர நிறுவனங்கள் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளன.
சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனமும் சிங்கப்பூர் உற்பத்தித்துறை சம்மேளனமும் இதற்கான இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் நேற்று கையெழுத்திட்டதாக கல்விக்கான இரண்டாவது அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் குறிப்பிட்டார்.நேற்று இணையம் வழி நடைபெற்ற ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வேலை- கல்வித் திட்ட சந்தையில் இதனைக் குறிப்பிட்ட டாக்டர் மாலிக்கி.
வேலை கல்வித் திட்டம் பெற்றுள்ள வெற்றியால் இது விரிவாக்கப்படுவதாக அவர் கூறினா்.
கடந்த 2015ல் இத்திட்டம் அறிமுகம் கண்டதிலிருந்து இதுவரை 7,000க்கும் மேற்பட்ட ஊழியர்களும் 1,600க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் பயனடைந்துள்ளன. புதிய நான்கு திட்டங்கள் உட்பட தற்போது மொத்தம் 187 வேலை-கல்வித் திட்டங்கள் உள்ளன.
அக்டோபரில் அறிமுகம் காணவுள்ள ஒரு திட்டம் பட்டய கல்விக்குப் பிந்திய படிப்பாகும். இதனை ரிபப்ளிக் பலதுறை தொழில் கல்லூரி, நீ ஆன் பலதுறை தொழில் கல்லூரி ஆகியவை இணைந்து வழங்குகின்றன.
மற்ற இரு திட்டங்கள் வர்த்தக பகுப்பாய்வு, மின்னிலக்க பொழுதுபோக்கு, நிகழ்ச்சிகள் துறைகள் தொடர்பானவை.
நான்காவது திட்டமான, வேலை-கல்வி பட்டயக் கல்விக்குப் பிந்திய பயிற்சித் திட்டம் (நிபுணத்துவ விண்வெளித் துறையில் பட்டயக் கல்வி) அடுத்த ஆண்டு ஜனவரியில் அறிமுகம் காணும்.
இது உரிமம் பெற்ற விமானப் பொறியியலாளராக பணிபுரிய விரும்புவோருக்கு உதவும்.
இத்திட்டம் செயல்முறை பயிற்சியை வழங்குவதோடு குடிமை விமானப் போக்குவரத்து ஆணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்குத் தயார்செய்யவும் உதவும்.

