செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
337bc10a-15cc-48ac-9859-c94a3026063b
-

சம்பளக் குறைப்பை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்ஐஏ

எஸ்ஐஏ நிறுவனம் கொவிட்-19இன் காரணமாக ஊழியர்களி்ன் சம்பளத்தைக் கடந்த ஆண்டு குறைத்தது. இம்மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து மாறுவிகித சம்பளத்தொகையின் குறைப்பை நிறுவனம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. சிங்கப்பூரைத் தளமாகக்கொண்ட ஊழியர்கள் இம்மாதம் முதல் முழுமையான சம்பளத்தைப் பெறுவர் என அந்நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

எஸ்ஐஏ நிறுவனம் செலவைக் குறைக்கும் முயற்சியில் மாறுவிகித சம்பளத்தொகையின் குறைப்பு, ஊதியம் இல்லா விடுப்பு மற்றும் வேலைக்குப் புதிதாய் ஆள் எடுப்பதையும் ஆட்குறைப்பையும் நிறுத்தி வைத்தல் போன்றவற்றை அமல்படுத்தியது. எனினும், விமானிகளுக்கான கூடுதல் சம்பளக் குறைப்பில் தற்போது எந்த மாற்றமும் இருக்காது என்றும் அது தெரிவித்தது. ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த இயக்குநர் சபை உறுப்பினர்களின் 30% சம்பள குறைப்பு தொடரும் என்றும் அது தெரிவித்தது.

சாங்கியில் பொருட்களை எடுத்துச் செல்ல தானியங்கி வாகனங்கள்

கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கிய சோதனையின் அடுத்த கட்டமாக, செப்டம்பர் முதல் சாங்கி விமான நிலைய முனையம் 3இல் தரையிறங்கும் விமானங்களில் இருந்து ஓட்டுநர் இல்லாத டிராக்டர் வாகனங்கள் சாமான்களை எடுத்து வரத் தொடங்கும். மனிதவள உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கில் தானியங்கி வாகனப் பயன்பாடு விமான நிலையத்தின் இலக்கில் இது முதல் உந்துதலாகும்.

இந்த தானியங்கி டிராக்டர், ஓட்டுநர் இயக்கும் டிராக்டரைப் போலவே 6,000 கிலோ சாமான்களை இழுக்கக்கூடியது. முழு அளவு பயணிகளைக் கொண்ட ஒரு விமானத்தில் இருந்து சாமான்களை ஏற்றிச் செல்ல இரண்டு டிராக்டர்கள் தேவை. தரை செயல்பாட்டைக் கையாளும் 'சாட்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து நேரடி விமானப் பணிகளுக்கு வாகனத்தைப் பயன்படுத்தும் என்று ​​சாங்கி விமான நிலையக் குழுமம் (சிஏஜி) கூறியது.

மின்சார வாகனங்கள் அதிகரிப்பு

தாராளமான வரிச் சலுகைகள், கடுமையான கரிம வெளியேற்ற கட்டுப்பாடுகள் காரணமாக சிங்கப்பூரில் மின்சார வாகனங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.

மின்சார வாகன எண்ணிக்கை 2020ஆம் ஆண்டு முதல் ஜூலை 2021ஆம் ஆண்டு வரையில் 39 விழுக்காடு அதிகரித்து 1,936 ஆக ஆகியுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியுள்ளது. இதில் வர்த்தக வாகனங்கள் 141 விழுக்காடு கூடி 234 ஆனது. மின்சார வர்த்தக வாகனங்களை வாங்குபவர்களுக்கு $30,000 ரொக்கத் தள்ளு படியை வழங்கும் மூன்று ஆண்டுத் திட்டத்தின் பயன் இது. அதே நேரத்தில், டீசலில் இயங்கும் வர்த்தக வாகனங்களுக்கு $10,000 கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.

பயணிகள் வாகனங்கள் 35 விழுக்காடு உயர்ந்து 1,643 ஆனது. இதற்கு பதிவு வரிச் சலுகை $25,000 வரை அளிக்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு புதிய ஊக்கத்தொகைகளும் அதிக வாகன மாதிரிகளும் அறிமுகப்படுத்தப்படும் போது மின்சார வாகன வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் ப்படுகிறது. மேலும் மின்னேற்ற உள்கட்டமைப்பும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.

'இசேட்டான்' பார்க்வே கிளை மூடல்

பல்பொருள் அங்காடியான 'இசேட்டான்' தனது பார்க்வே பரேட் கிளையை மூடவுள்ளது. மார்ச் மாதம் குத்தகைக் காலம் முடிவுற்றதும் அது மூடப்படும். வேறு இடத்தில் புதிய கிளையைத் திறக்கும் எண்ணம் இல்லை என்றும் ஷா ஹவுஸ், தெம்பனிஸ் மால், நெக்ஸ் ஆகிய இடங்களில் உள்ள கிளைகள் தொடர்ந்து செயல்படும் என்றும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் அது தெரிவித்தது. சென்ற ஆண்டு மார்ச் மாதம் ஜூரோங் ஈஸ்ட்டில் இருந்த அதன் வெஸ்ட் கேட் கிளையை மூடியது.

கொள்ளைநோய் நெருக்கடியால், அண்மைய மாதங்களில் ராபின்சன்ஸ், ஸ்போர்ட்ஸ்லிங்க் டாப்ஷாப் போன்ற கடைகள் சிங்கப்பூர்ச் சந்தையிலிருந்து வெளியேறின அல்லது இணைய வர்த்தகத்துக்கு மாறிவிட்டன.