ஆகஸ்ட் 28ஆம் தேதி அதிகாரபூர்வ திறப்புவிழா காணவுள்ள தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் (டிஈஎல் ஆறு புதிய நிலையங்களை பொதுமக்கள் முன்கூட்டியே ஆகஸ்ட் 23 முதல் 27 வரை மெய்நிகரில் பார்க்கலாம்.
கொவிட்-19 சூழ்நிலை காரணமாக இணையம் வழியாக நிலையங்கள் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் இரண்டாம் கட்டம் (டிஈஎல்2) என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய ரயில் பாதையில் அமைந்துள்ள ஸ்பிரிங் லீஃப், லெந்தோர், மேஃபிளவர், பிரைட் ஹில், அப்பர் தாம்சன், கால்டிகாட் ஆகிய நிலையங்கள் இப்போது திறக்கப்படுகின்றன. உட்லண்ட்ஸ் நார்த், உட்லண்ட்ஸ், உட்லண்ட்ஸ் சவுத் ஆகிய மூன்றும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டன.
இப்பாதையில் இரு போக்குவரத்து சந்திப்பு நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. கால்டிகாட் வட்ட ரயில் பாதையுடன் இணைக்கிறது. கட்டப்படவுள்ள குறுக்கு ரயில் பாதையுடன் பிரைட் ஹில் இணைக்கிறது.
புதிய நிலையங்களில் கட்டடச் சிறப்பு, அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள், அவசரகாலத்தில் குடிமைத் தற்காப்பின் பதுங்குமிடங்களாக அவை எவ்வாறு செயல்படும், நிலையங்களைச் சுற்றியுள்ள காட்சிகள் போன்றவை குறித்த முன்னோட்டத்தை இந்த மெய்நிகர் காட்சியில் காணலாம்.
இப்பாதையின் கட்டுமானத்தின்போது எதிர்கொண்ட சவால்கள் பற்றி பொறியியலாளர்கள் கூறும் கதைகளையும் கேட்கலாம்.
மேலும், தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் (டிஈஎல்) பெட்டியை உருவாக்கும் பயிலரங்கு, பொதுமக்கள் பங்குபெறும் ஃபேஸ்புக் நேரடி நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.
மேல் விவரங்களையும் நடவடிக்கைகளையும் https://go.gov.sg/TEL2OH என்ற இணையத்தளத்தில் காணலாம்.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை 2 கடந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால் தொற்றுநோய் பரவல், கடந்த டிசம்பர் மாதம் டிஈஎல்1 பாதையில் ஏற்பட்ட முக்கிய சமிக்ஞை கோளாறு காரணமாக ரயில் கட்டமைப்பு மென்பொருள் மறுஆய்வு போன்றவை காரணமாக தாமதம் ஏற்பட்டது.
டிஈஎல்1, டிஈஎல்2 ரயில் பாதைகள் கிட்டத்தட்ட 100,000 குடும்பங்களுக்கு பயனளிக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.
43 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் 32 நிலையங்களும் 2025 இல் முழுமையாக நிறைவடையும்போது சராசரியாக அன்றாடம் 500,000 பயணிகளை இது பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலத்தில் இந்த எண்ணிக்கை ஒரு மில்லியனாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
உட்லண்ட்ஸிலிருந்து சுங்கை பிடோக் வரை செல்லும் இந்த ரயில் பாதை, வரவுள்ள சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையிலான இணைப்பு ரயில் பாதையையும் இணைக்கும்.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையை நிர்மாணிக்க $25 பில்லியனுக்கும் அதிகமாக செலவாகும் என்று முன்னாள் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் கூறியிருந்தார்.

