தங்களுக்கிடையிலுள்ள வேறுபாடுகளை அடக்கத்துடன் பொறுமையாகவும் அன்பாகவும் கையாளும் ஆற்றல்தான் சிங்கப்பூரின் ஒற்றுமைக்கு வலு சேர்ப்பதாகத் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார். அதுவே சிங்கப்பூரின் பெரும் பலங்களில் ஒன்று என்றும் திரு ஹெங் சொன்னார்.
குறிப்பாக மக்களின் உணர்வுகளைத் தூண்டக்கூடிய இனம், மதம் சார்ந்த விவகாரங்களைப் பற்றிப் பேசும்போது இந்த அம்சம் பொருந்தும் என்பதை அவர் சுட்டினார்.
"இத்தகைய விவகாரங்களைப் பொறுத்தவரை நமக்கு மாறுபட்ட கருத்துகள் இருப்பதோடு அவற்றைக் கையாள வெவ்வேறு அணுகுமுறைகள் இருக்கும் என்பதையும் நாம் கருத்தில்கொள்ளவேண்டும்," என்று சிங்கப்பூரின் வருங்காலத்தை வடிவமைப்பதன் தொடர்பில் தேசியப் பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் திரு ஹெங் சொன்னார்.
தங்களிடம் இருக்கக்கூடிய பாரபட்சமான கருத்துகளையும் இனம் போன்ற விவகாரங்களின் தொடர்பில் தவறவிடக்கூடிய அம்சங்களையும் கண்டறிந்து அவற்றைத் திருத்திக்கொள்ள அடக்கமாக இருக்குமாறு அவர் சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டார்.
இத்தகைய விவகாரங்களைப் பற்றிப் பிறருடன் பேசும்போது மக்கள் பொறுமையாகவும் ஒருவருக்கொருவர் அன்பாகவும் நடந்துகொள்ளவேண்டும் என்று அவர் கூறினார்.
"ஒரே கருத்தை வலியுறுத்திச் சொல்வதால் முன்னேற்றம் காணமுடியாது. அதற்குப் பதிலாகப் பல்வேறு கோணங்களை ஆராய்ந்து அவற்றை ஒன்றுசேர்ப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கவேண்டும்," என்றார் அவர்.
அண்மையில் நிகழ்ந்த சில சம்பவங்களால் சிங்கப்பூரின் இன நல்லிணக்கம் தொடர்பில் அதிகமாகப் பேசப்பட்டதைச் சுட்டிய துணைப் பிரதமர், இந்த அம்சத்தில் சமூகமாக இன்னும் சிறந்து விளங்க சிங்கப்பூரர்கள் எண்ணம் கொண்டுள்ளதாகச் சொன்னார்.
சுதந்திரமடைந்த காலத்தில் சிங்கப்பூர் எதிர்கொண்ட குழப்பங்களைப் பார்க்காத இளையர்கள் பொதுவாக நல்ல கல்வியைப் பெற்றவர்கள் என்றும் உலக நிகழ்வுகளையும் போக்குகளையும் நன்கு அறிந்தவர்கள் என்றும் திரு ஹெங் குறிப்பிட்டார். அவர்கள் பொதுவாக இனம், மதம் சார்ந்த கருத்துகளை வெளிப்படையாகத் தெரியப்படுத்தத் தயங்குவதில்லை என்றும் அவர் கூறினார். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அவர்கள் கருத்துகளை அதிகமாகத் தெரிவிப்பதை அவர் சுட்டினார்.
"நாம் இதுவரை கட்டிக்காத்துவரும் ஒற்றுமை உணர்வு உங்களுக்குக் கைகொடுக்கும் என்று நம்புகிறேன்," என்றார் திரு ஹெங்.
இதுபோன்ற விவகாரங்களை, தொடர்ந்து அடக்கத்துடன் பொறுமையாகவும் அன்பாகவும் அணுகினால் இளையர்களால் சிங்கப்பூரின் ஒற்றுமை உணர்வை மேலும் வளர்க்கமுடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளதாகத் திரு ஹெங் கூறினார்.

