செய்திக்கொத்து

2 mins read
aa65f31a-fe7d-4839-b6a8-02e3fd4e77af
-

சிறையிலிருந்து வந்த மறுநாள் ஓட்டுநரைத் தாக்கிய ஆடவர்

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மறுநாளே ஆடவர் ஒருவர் மது போதையில் பேருந்து ஓட்டுநரைத் தகாத வார்த்தைகளால் பேசி இழிவுபடுத்தயுள்ளார்.

ஓட்டுநரைப் பயங்கரவாதி எனச் சொல்லி அவரது மதத்தை இழிவுபடுத்தியுள்ளார்.

சம்பவம் கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதியன்று செங்காங் பெருவிரைவு ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிகழ்ந்தது.

அதனைத் தொடர்ந்து 53 வயது ஜஸ்விண்டர் சிங் மெஹர் சிங்கிற்கு 13 வாரங்கள் 12 நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒருவரின் மதம் சார்ந்த உணர்வுகளைப் புண்படுத்தியது, பொது இடத்தில் மது போதையில் இருந்தது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.

தொந்தரவு செய்தது, கொவிட்-19 கட்டுப்பாடுகளை மீறியது என்று அவர் மீது சுமத்தப்பட்டிருந்த மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளும் தீர்ப்பளிக்கும்போது கருத்தில் கொள்ளப்பட்டன.

புதிய வகை மோசடிச் செயல்

குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் எனத் தங்களை அடையாளப்படத்திக்கொண்டு தொலைபேசிவழி கொவிட்-19 விதிமுறைகளை மீறியதாக மக்களிடம் கூறும் மோசடி வேலையில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

தங்களின் அதிகாரிகள் என்று சொல்லிக்கொண்டு மோசடிக்காரர்கள் இவ்வாறு செய்வதாக ஆணையம் கூறியது.

மோசடிக்காரர்கள் +656812-5555 என்ற எண்ணிலிருந்து சிலருக்கு அழைத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த எண்ணிலிருந்து மக்களுக்கு அழைத்து கொவிட்-19 தொடர்பில் பொய்த் தகவல்களைப் பரப்புவதாக மோசடிக்காரர்கள் தவறாகக் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

அது குறித்து புகார் அளிக்கப்படும் என்றும் அதைத் தவிர்க்க சம்பந்தப்பட்டவர் அபராதம் கட்டவேண்டும் என்றும் மோசடிக்காரர்கள் மிரட்டுவர்.

இப்படிப்பட்ட அைழப்புகளையும் மோசடிக்காரர்களையும் பொருட்படுத்தாமல் இருக்குமாறு ஆணையம் மக்களுக்கு அறிவுறுத்தியது.

இதன் தொடர்பில் காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளதாகவும் அது கூறியது.

சிங்கப்பூர் நீரிணையில் ஆயுதம் ஏந்திய இரண்டு திருடர்கள்

சென்ற மாதம் ஆசியாவில் கப்பல்களிலிருந்து ஆயுதம் ஏந்தியவர்கள் திருடியதாக ஐந்து சம்பவங்கள் இடம்பெற்றன. அவற்றில் இரண்டு சம்பவங்கள் சிங்கப்பூர் நீரணையில் ஒரே நாளில் நிகழ்ந்தவை.

இரண்டு சம்பவங்களிலும் கத்திகளை வைத்திருந்த திருடர்கள் காலையில் கப்பல்களுக்குள் நுழைந்திருக்கின்றனர்.

ஆனால் கப்பலின் ஊழியர்கள் அவர்களைப் பார்த்ததால் திருடர்கள் எந்தப் பொருளையும் திருடாமல் தப்பித்தனர்.

சம்பவங்கள் சென்ற மாதம் 17ஆம் தேதியன்று நிகழ்ந்தன.

கப்பலின் ஊழியர்களுக்கு ஆபத்து ஏதும் நேரவில்லை. கப்பல்கள் அப்போது இந்தோனீசியாவுக்குச் சொந்தமான நீர்ப்பகுதியில் இருந்தன.