குற்றச் செயல்களைத் தடுக்க உதவிய பொதுமக்களில் மூவருக்கும் காவல்துறையினருடன் இணைந்து செயல்பட்ட ஐந்து அமைப்புகளைச் சேர்ந்த 12 பேருக்கும் கிளமென்டி காவல்துறை பிரிவு விருதுகளை வழங்கியுள்ளது.
பொதுமக்களில் மூவருக்குப் பொதுநல விருது வழங்கப்பட்டது. பொது இடத்தில் மானபங்கப்படுத்தப்பட்ட ஒருவருக்கு உதவியது, திருடர்களைப் பிடிக்க உதவியது போன்ற செயல்களுக்காக அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் மூத்த பாதுகாப்பு அதிகாரியாகப் பணிபுரியும் திரு சாமிநாதன் தினகரன் தனிநபர் விருதுகளை வென்றோரில் ஒருவர்.
கழிவறையில் ரகசியமாக ஒருவரைத் தவறான கண்ணோட்டத்துடன் பார்த்தவரைப் பிடிக்க அவர் காவல்துறையினருக்கு உதவினார்.
அதேபோல் குற்றச் செயல்களைத் தடுக்கக் காவல்துறையினருக்கு உதவிய அமைப்புகளும் அங்கீகரிக்கப்பட்டன.
ஜூரோங் வட்டாரத்தில் அமைந்துள்ள சில 'செவன்-இலெவன் (7-11)' கடைகள் அவற்றில் அடங்கும்.
சமூகத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கப் பொதுநலத்துடன் நடந்துகொண்டதற்காகக் காவல்துறை துணை ஆணையரும் கிளமென்டி காவல்துறை பிரிவின் தளபதியுமான மார்க் இ விருது வழங்கியோரைப் பாராட்டினார்.
பொதுநல உணர்வு வலுவாகவும் இன்னும் பரவலாகவும் இருந்தால் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கும் அவர்களைக் குற்றம் செய்யாமல் தடுப்பதற்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று அவர் சுட்டினார்.
விருது வென்றவர்களின் செயல்கள் சமூகத்தில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதாக அவர் கூறினார்.

