இம்மாதம் 19ஆம் தேதியிலிருந்து வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், நகர மறுசீரமைப்பு ஆணையம் ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும் மின்னியல் கட்டணமுறை வாகன நிறுத்துமிடங்களில் முதல் பத்து நிமிட கால அவகாச முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.
அதன்படி, இந்த வாகன நிறுத்துமிடங்களுக்குச் செல்லும் வாகனங்கள் பத்து நிமிடங்களுக்குள் வெளியேறினால் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக அண்மையில் 20 நிமிட கால அவகாசம் வழங்கப்பட்டது.
கால அவகாசம் 10லிருந்து 20 நிமிடங்களுக்கு உயர்த்தப்படுவதாக கடந்த மே மாதம் 21ஆம் தேதியன்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தமது ஃபேஸ்புக் மூலம் அறிவித்தார். கொவிட்-19 சூழலின்போது உணவு விநியோகச் சேவைகளுக்கான தேவை அதிகரித்திருப்பதால் உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு உதவும் வகையில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டது.
தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நிலையில் கால அவகாசம் மீண்டும் 10 நிமிடங்களுக்குக் குறைக்கப்படுகிறது.

