சின் சுவீ ரோடு, ஜாலான் குக்கோ குடியிருப்பாளர்கள் சோதிக்கப்படுவர்
சின் சுவீ ரோடு, ஜாலான் குக்கோ ஆகியவற்றில் உள்ள மூன்று வீவக புளோக்குகளில் வசிக்கும் 15 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
இதுவரை புளோக் 52 சின் சுவீ ரோட்டில் வசிக்கும் இரண்டு குடும்பங்களில் ஐந்து பேருக்குத் தொற்று காணப்பட்டு உள்ளது.
புளோக் 3 ஜாலான் குக்கோவில் வசிக்கும் மூன்று குடும்பங்களில் மூன்று பேருக்கும் புளோக் 9 ஜாலான் குக்கோவில் வசிக்கும் நான்கு குடும்பங்களில் ஏழு பேருக்கும் தொற்று கண்டறிபட்டது.
தொற்று எப்படி ஏற்பட்டது என்பதைக் கண்டறிய அமைச்சு புலன்விசாரணை நடத்தி வருகிறது.
புளோக்குகள் 52 மற்றும் 53 சின் சுவீ ரோடு, புளோக்குகள் 3 மற்றும் 9 ஜாலான் குக்கோ ஆகியவற்றில் கொவிட்-19 சாத்தியம் பற்றி அமைச்சு புலன்விசாரணை நடத்தி வருகிறது. இதன் காரணமாக அந்தப் புளோக்குகளின் குடியிருப்பாளர்கள், கடை உரிமையாளர்கள், அங்கு வேலை செய்வோர் அனைவருக்கும் கட்டாய கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கையாக ஜாலான் குக்கோ உணவு நிலையத்தில் வேலை செய்யும் ஊழியர்கள், துப்புரவாளர்கள் அனைவருக்கும் கட்டாய சோதனை நடத்தப்படும் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
சின் சுவீ ரோட்டில் உள்ள புளோக் 51க்கும் புளோக் 53க்கும் இடையே இருக்கும் வெற்றுத்தளத்தில் இன்று கட்டாய பரிசோதனை நடத்தப்படும். புளோக் 9 ஜாலான் குக்கோ நான்காவது மாடியில் உள்ள வெற்றுத்தளத்தில் இன்றும் நாளையும் பரிசோதனை நடக்கும்.
ஆகஸ்ட் 11க்கு பிறகு தொற்று இல்லை என்று என்பது பரிசோதனை மூலம் யாருக்காவது தெரிந்திருந்தால் அவர்கள் விரும்பினால் இப்போது சோதித்துக்கொள்ளலாம்.
புதிதாக 57 பேர் பாதிப்பு
இதனிடையே, சமூகத்தில் நேற்று புதிதாக 57 பேர் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளாயினர்.
அவர்களில் 29 பேர் முந்தைய நோயாளிகளுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள். இதர 11 பேர் முந்தைய கொரோனா நோயாளிகளுடன் தொடர்புடையவர்கள். இவர்கள் தனிமைப்படுத்தப்படவில்லை.
தடமறிதல் மூலம் இவர்களுக்குத் தொற்று இருந்தது தெரிந்தது. எஞ்சிய 17 பேருக்கு தொற்று எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் 70 வயதைக் கடந்த முதியவர். அவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர். கடுமையான பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு அவருக்கு இருக்கிறது என்று சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
வெளிநாட்டில் இருந்து வந்தவர்களில் ஒருவருக்குத் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இங்கு தரையிறங்கியபோது தனிமைப்படுத்தப்பட்டார்.
புதிதாக கிருமி தொற்றி இருப்போரையும் சேர்த்து சிங்கப்பூரில் தொற்றுக்கு ஆளானோரின் மொத்த எண்ணிக்கை 66,119 ஆனது.
இதனிடையே, தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 84 வயது முதியவர் கொவிட்-19 தொற்று காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை மரணமடைந்தார். அவர், புற்றுநோய், இதய நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் ஆகிய நோய்களால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு இருந்தார்.

