நீரிழிவு, இதய, புற்றுநோயாளிக்கு கொவிட்-19 தடுப்பூசி அவசியம்
சிங்கப்பூரில் கொவிட்-19 காரணமாக 44 பேர் மரண மடைந்து இருக்கிறார்கள். ஆகஸ்ட்டில் மட்டும் ஏழு பேர் மாண்டுவிட்டனர். அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள். பலருக்கும் நீரிழிவு, இதயநோய், புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்கெனவே இருந்து வந்தன.
இப்படிப்பட்ட முற்றிய நோய்களால் பாதிக்கப்பட்ட வர்களை கொவிட்-19 கிருமி தொற்றும்போது அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு மிகவும் அதிகம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். இது பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பல வல்லுநர்களிடம் பலவற்றையும் கேட்டறிந்தது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் இதயநல நிலையத்தின் இதய சிகிச்சைத் துறை மூத்த ஆலோசகர் பேராசிரியர் டான் ஹுவே செம், இதயப் பிரச்சினை உள்ள கொவிட்-19 நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படு வதற்கான வாய்ப்பு ஆறு மடங்கு அதிகம் என்றார்.
மரண விகிதமும் 10 மடங்கு அதிகம் என்று அவர் தெரிவித்தார். அதேபோல, கொவிட்-19 கிருமி தொற்றிய நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரை, மரண விகிதம் ஏழு மடங்கு அதிகம் என்றாரவர். உயர் ரத்த அழுத்த நோயாளிகளிடம் இது ஆறு மடங்கு அதிகம்.
நீரிழிவு நோயாளிகளுக்குச் சளிக்காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம் என்று 'டயபிட்டிஸ் சிங்கப்பூர்' என்ற அறப்பணி அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் பீ யோங் மோங் கூறினார்.
இதனிடையே, புற்றுநோயாளிகளில் பெரும்பாலான வர்கள் கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் நிலையத்தைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் இயான் டான் தெரிவித்தார்.
புற்றுநோயாளிகள் கொவிட்-19 தொற்று ஆபத்தையும் கடுமையையும் குறைத்துக்கொள்ள வேண்டுமானால் அவர்கள் முற்றிலும் இரு தடுப்பூசியையும் போட்டுக் கொள்ள வேண்டியது முக்கியமானது என்று பேராசிரியர் டான் குறிப்பிட்டார்.
வாரம் இரண்டு முறை
கொவிட்-19 பரிசோதனை
பொதுமக்களுடன் அடிக்கடி கலந்துறவாடும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மேலும் பலருக்கும் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் வாரம் இரண்டு முறை கொவிட்-19 வேகப் பரிசோதனை நடத்தப்படும்.
கடைத்தொகுதிகள், பேரங்காடிகளில் வேலை பார்ப்போர், டாக்சி தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள், விநியோக ஊழியர்கள், வாகனம் ஓட்ட பயிற்சி அளிப்பவர்கள், பொதுப் போக்குவரத்து முன்களப் பணியாளர்கள் ஆகியோர் அவர்களில் அடங்குவர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
பரிசோதனைக்கு வசதிகளைச் செய்து தரும்படி இத்தகைய ஊழியர்களின் முதலாளிகள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.
'தடுப்பூசி அல்லது தொடர் பரிசோதனை' என்ற இந்த ஏற்பாடு அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கும்.
சிங்கப்பூரில் அதிக காலம் இருந்துவரும் குறுகிய கால அனுமதிதாரர்களுக்கு ஆகஸ்ட் 18 முதல் தேசிய தடுப்பூசித்திட்டம் நீட்டிக்கப்படும் என்று அமைச்சு அறிவித்து உள்ளது.

