தேசிய பராமரிப்பு நேரடி தொலைபேசிச் சேவையில் தொடர்பு கொள்வோர் மனநல முதலுதவியைப் பெறலாம். உணர்வுபூர்வ ஆதரவும் அவர்களுக்குக் கிடைக்கும்.
இந்தச் சேவை சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. அது முதல் அந்தத் தொலைபேசி மூலம் 45,000க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன.
சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி நேற்று ஒரு மாநாட்டில் பேசியபோது, இந்தப் புள்ளிவிவரங்களைத் தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்று நாட்டின் மனநலத்திற்கும் சுகாதாரப் பராமரிப்பு ஏற்பாடுகளுக்கும் கடும் சோதனையாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தத் தொற்று மக்களின் மனநலனுக்கும் சுகாதாரத்திற்கும் தொடர்ந்து ஒரு சவாலாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள தாக்கங்கள் பல ஆண்டுகள் நீடிக்கும் என்று கணிக்கப்படுகிறது.
'ஆசிய பசிபிக் முழு மனநல மாநாட்டில்' டாக்டர் ஜனில் உரையாற்றினார். அந்த மெய்நிகர் மாநாட்டில் அனைத்துலக வல்லுநர்களும் உள்ளூர் வல்லுநர்களும் முழுமனநலம், மனநல்வாழ்வு போன்றவை தொடர்பான தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
அந்த மாநாடு நேற்று தொடங்கி இம்மாதம் 29ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள் நடக்கிறது. 'பிரஹம் சென்டர்' என்ற மனநல நல்வாழ்வு அறப்பணி அமைப்பு அதற்கு ஏற்பாடு செய்தது.
அதில் பங்கெடுத்துக்கொள்ள விரும்பி 59 நாடுகளைச் சேர்ந்த 6,000க்கும் அதிகமானவர்கள் கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.
கொரோனா தொற்று காரணமாக சிங்கப்பூரர்களின் மனநலனில் ஏற்பட்டுள்ள விளைவுகள் பற்றி இப்போது அடிக்கடி விவாதிக்கப்பட்டு வருகிறது.
பிரஹம் சென்டரின் தலைமை நிர்வாகியான இணைப் பேராசிரியை ஏஞ்ஜி சியூ, சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்கள் முதல் ஆசிரியர்கள், மாணவர்கள் வரை பலரும் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்த அறப்பணி நிலையத்தின் முழு மனநல பயிற்சி பற்றி சென்ற ஆண்டு ஏப்ரல் முதல் அதிக மானோர் விசாரித்திருக்கிறார்கள்.
சென்ற ஆண்டு இந்த நிலையம் 23,000க்கும் மேற்பட்ட மக்களுக்குப் பயிற்சி அளித்து இருக்கிறது.
இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டைவிட மூன்று மடங்கு அதிகம் என்று பேராசிரியை தெரிவித்தார்.

