தடுப்பூசி: முதியோரை பரிந்துரைப்போருக்கு $30 பற்றுச்சீட்டு; சுகாதார வாரியத்தின் செயல்திட்டம்

தடுப்பூசி: முதியோரை பரிந்துரைப்போருக்கு $30 பற்றுச்சீட்டு; சுகாதார வாரியத்தின் செயல்திட்டம்

2 mins read
b8543534-2e0a-47bc-8191-df055f061418
தடுப்பூசி போட்டுக் கொள்ளும் முதியவர் களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் கூடி வருகிறது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் -

கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள முதியோரை அனுப்பி வைப்போருக்கு ஆகஸ்ட் 13 முதல் வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை $30 சுகாதார மேம்பாட்டு வாரியத் தின் பற்றுச்சீட்டு கிடைக்கும்.

அவர்கள் 60க்கும் அதிக வயதுள்ள எத்தனை பேரை தடுப்பூசி நிலையத்திற்கு அனுப்பி வைக்கிறார்களோ அதற்குத் தகுந்தாற்போல் இந்தத் தொகை அதிகமாகக் கிடைக்கும் என்று வாரியம் தெரிவித்து உள்ளது.

இந்த வாரியத்தின் வெகுமதி செயல் திட்டத்தில் பங்கெடுத்துக்கொள்ளும் ஃபேர்பிரைஸ், கெத்தே சினிமாஸ், சாக்கே சுஷி, லிஹோ டீ உள்ளிட்ட நிறுவனங்களில் அந்தப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி பலன் அடையலாம்.

இதற்குத் தகுதி பெற முதலில் ஒருவர் இணையம் மூலம் இதில் பதியவேண்டும். இதைச் செய்தால் இந்த வாரியத்திடம் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வரும்.

பிறகு அவர்கள் முதியவர்களைத் தடுப்பூசிக்குப் பரிந்துரைக்கலாம். வாரியத்தின் ஊழியர்கள் பணியிலிருக்கும் தடுப்பூசி நிலையத்திற்கு முதியவர்களுடன் அவர் செல்ல வேண்டும்.

அங்கு வாரியத்தின் குறுஞ்செய்தியையும் தனது அடையாள அட்டையையும் அவர் காட்ட வேண்டும். முதியவருக்கு இரண்டு தடுப்பூசியம் போடப்பட்ட பிறகு அவரின் கணக்கில் (Healthy 365) தொகை வரவுவைக்கப்படும்.

இத்திட்டத்தில் 17க்கும் அதிக வயதுள்ள சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், எம்பிளாய்மண்ட், ஒர்க் பர்மிட் ஊழியர்கள் கலந்துகொள்ளலாம். முதியோரிடையே தடுப்பூசி விகிதம் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடி வரும் நிலையில், இந்தச் செயல்திட்டம் நடப்புக்கு வருகிறது.

இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத முதியவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 177,000 ஆக இருக்கிறது என்று ஜூலை 31ஆம் தேதி சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.