தகவல்தொடர்புத் துறையில் இன்னமும் 20,500க்கும் மேற்பட்ட வேலை, பயிற்சி, வேலை அனுபவ வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்
பட்டுள்ளது.
கடந்த மே மாதம் இறுதிக்குள் இந்தத் துறையில் கிட்டத்தட்ட 16,200 பேர் வேலையில் அமர்த்தப்பட்ட பிறகும் மேலும் பலருக்கு அதில் வாய்ப்புகள் உள்ளதாக மனிதவள அமைச்சும் சிங்கப்பூர் ஊழியரணியும் நேற்று முன்தினம் தெரிவித்தன.
இந்தச் சவால்மிக்க கால
கட்டத்தில் வேலை தேடுவோருக்கு வேலை தேடித் தர தகவல்தொடர்புத் துறை நிறுவனங்களிலிருந்து வேலை நியமன முகவைகள் வரை 240 பங்காளிகளுடன் மனிதவள அமைச்சும் சிங்கப்பூர் ஊழியரணியும் கடந்த ஆண்டு இணைந்து செயல்பட்டன.
சவால்மிக்க காலகட்டங்களில் பங்காளிகளின் வளங்களும் கட்டமைப்புகளும் வேலை தேடுவோருக்குப் பெரிதும் உதவுவதாக LinkedIn ஏஷியா பசிபிக் ஊழியர்களிடம் காணொளி வழி பேசிய மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறினார்.
வேலை தேடுவோருக்குத் தகுந்த வேலையைத் தேடித் தர செயற்கை நுண்ணறிவு அணுகுமுறையைப் பயன்படுத்த நிறுவனங்களை அரசாங்கம் ஊக்குவிக்கிறது. சமூக அளவில், சிங்கப்பூர் ஊழியரணியின் தொண்டூழியர்கள் வேலை தேடுவோருடன் பல ஆண்டுகள் அனுபவமும் பெரிய கட்டமைப்பும் கொண்டவரின் உதவியை நாடினர்.
சுகாதாரப் பராமரிப்பு, சில்லறை வர்த்தகம் போன்ற துறைகளுக்கு இந்தத் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
மற்ற துறைகளுக்கு இத்திட்டம் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும்.
ஊழியர்களுக்குத் தேவையான திறன்களைக் கற்றுத் தர சீனர் மேம்பாட்டு உதவி மன்றம், மெண்டாக்கி, சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம், யூரேஷியர் சங்கம் ஆகிய நான்கு சுய உதவிக் குழுக்களும் திட்டங்களைக் கொண்டுள்ளன.
இதற்கிடையே, அரசாங்கத்துக்கும் ஊழியர்களுக்கும் இடையே பாலமாக தொழிற்சங்கங்களும் வர்த்தகச் சங்கங்களும் தொழிற்
சபைகளும் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் பல அமைப்புகள் வேலை, திறன்கள் மேம்பாட்டுத் திட்டங்களை நடத்தவும் வர்த்தக உருமாற்றத்தை ஊக்குவிக்கவும் அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகின்றன.
வேலை நியமன இணைய வாசல்களும் வேலை நியமன முகவைகளும் வேலை தேடுவோருக்குக் கூடுதல் தெரிவுகளை வழங்குகின்றன.
சிங்கப்பூரில் தலைசிறந்த உலகளாவிய நிறுவனங்கள், தொழில்துறை சங்கங்கள், பயிற்சிக் கழகங்கள் ஆகியவை இருப்பதாகவும் வேலை நியமன இடைவெளியை எதிர்கொள்ள இவற்றின் உதவியைப் பயன்படுத்தலாம் என்றும் தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்தார்.

