உடற்பிடிப்பு நிலையங்களில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளை அடுத்து, ஒன்பது பேரிடம்
விசாரணை நடத்தப்படுகிறது.
அவர்களில் உடற்பிடிப்புப் பெண்களும் நிலையங்களை நடத்துபவர்களும் அடங்குவர். உடற்பிடிப்பு நிறுவனங்களுக்கான விதிமுறைகளை ஏழு நிலையங்கள் மீறி
இருப்பதாகக் கூறப்படுகிறது.
நான்கு நிலையங்கள் உரிமம்இன்றி இயங்கியதாக கூறப்படுகிறது. இன்னொரு மூன்று உடற்பிடிப்பு நிலையங்களில் பாலியல் தொடர்பான நடவடிக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு 37, 45 வயது.
"இவ்விரு பெண்களும் உடற்பிடிப்பு நிலையங்களில் பாலியல் சேவைகளை வழங்கியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது," என்று போலிசார் தெரிவித்தனர்.
இம்மாதம் 4ஆம் தேதியிலிருந்து 11ஆம் தேதி வரை நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையை அங் மோ கியோ போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நடத்தினர்.
அங் மோ கியோ அவென்யூ 4 மற்றும் 11, பிரைட்டன் கிரசெண்ட், ஹவ்காங் அவென்யூ 8, அப்பர் பாய லேபார் சாலை, இயோ சூ காங் ஆகிய வட்டாரங்களில் உள்ள உடற்பிடிப்பு நிலையங்களில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.
உரிமம் இல்லாது உடற்பிடிப்பு நிலையங்களை நடத்தும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டு கள் வரை சிறைத் தண்டனை, $10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

