செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
3d7c9257-79c4-4354-b38d-41b62530c903
-

உள்ளூர் ஊழியரணியின் பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை

வேலை, வர்த்தகம் நிமித்தம் வெளிநாட்டவர்களை சிங்கப்பூருக்கு வரவிடாமல் செய்வது சிங்கப்பூரைப் பாதிக்கும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். உள்ளூர் ஊழியரணிக்குப் பலம் சேர்க்கும் வகையில் வெளிநாட்டுத் திறனாளர்களை ஈர்க்க வேண்டும் என்றார் அவர். அப்போதுதான் கூடுதல் நிறுவனங்கள் சிங்கப்பூரில் முதலீடு செய்யும் என்றும் அதன் விளைவாக சிங்கப்பூரர்களுக்கு மேலும் பல வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது வேலைகளுக்காக அவர்களுடன் போட்டிபோட வேண்டியிருக்கும் என்று சிங்கப்பூரர்கள் கவலை அடைவது இயல்பு என்றார் திரு லீ.

வேலை கிடைக்காமல் போனாலும் அல்லது பதவி உயர்வு கிடைக்காமல் போனாலும் நியாயமற்ற வகையில் தாம் நடத்தப்படுவதாக சிங்கப்பூரர்கள் கருதக்கூடும் என்று திரு லீ தெரிவித்தார்.

சிங்கப்பூரர்களிடையே நிலவும் இத்தகைய பதற்றங்களை எதிர்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களின் தரம், எண்ணிக்கை ஆகியவை தொடர்பான கொள்கைகள் மாற்றியமைக்கப்படும் என்றார் பிரதமர் லீ.

வேலையிடங்களில் நியாயமற்ற வகையில் நடத்தப்படுவது, ஊழியர்களை வேலையில் அமர்த்துவதில் நிறுவனங்கள் நியாயமற்ற வகையில் நடந்துகொள்வது ஆகியவற்றைக் குறைக்க நியாயமான வேலை நியமன அணுகுமுறை தொடர்பான முத்தரப்பு வழிகாட்டி நெறிமுறைகளும் நியாயமான பரிசீலனைக் கட்டமைப்பும் பிரதான தளங்களாக விளங்குகின்றன.

வேலையிடங்களில் நியாயமற்ற வகையில் நடத்தப்படுவது குறித்து நியாயமான, முற்போக்கு வேலை நியமன அணுகுமுறைகளுக்கான முத்தரப்புக் கூட்டணி மற்றும் மனிதவள அமைச்சிடம் புகார் செய்யலாம்.

குறைந்த வருமான ஊழியர்களுக்கு ஆதரவு

கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக குறைந்த வருமான ஊழியர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே குறைவாக இருக்கும் வருமானம் மேலும் சரிவு கண்டதாலும் எதிர்பாராத விதமாக வேலையை இழந்ததாலும் இப்பிரிவினர் மிக மோசமான வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறுகியகால அடிப்படையில் நெருக்கடிநிலையைச் சமாளிக்க அவர்களுக்குக் கூடுதல் உதவி வழங்கப்பட்டுள்ளது. குறைந்த வருமான ஊழியர்களின் நிலை மேம்படுவது, அனைவரையும் உள்ளடக்கும் வளர்ச்சியின் முக்கிய அம்சமாகும் என்று பிரதமர் லீ வலியுறுத்தினார்.

எதிர்காலத்தில் சிங்கப்பூர் திறன் அடிப்படையிலான பொருளியலாகும்போது குறைந்த வருமான ஊழியர்களுக்கு நீடித்து நிலைத்திருக்கும் ஆதரவு தேவை என்றும் அப்போதுதான் அவர்களும் அவர்களது பிள்ளைகளும் முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் பிரதமர் லீ கூறினார்.

குறைந்த வருமான ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை முத்தரப்புப் பணிக்குழு ஆராய்ந்து வருகிறது.

குறைந்த வருமான ஊழியர்களுக்காக மூன்று வெவ்வேறு சம்பள அடிப்படையிலான கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இன, சமய நல்லிணக்கம் தொடர எடுக்கப்படும் முயற்சிகள்

இனம், சமயம் ஆகியவை சமுதாயத்தில் மிக எளிதில் பிளவை ஏற்படுத்தலாம் என்பதை அண்மையில் நிகழ்ந்த இனவாதச் சம்பவங்கள் காட்டுகின்றன. இனம், சமயம் ஆகியவை தொடர்பான விவகாரங்களை வெளிப்படையாகவும் மரியாதையுடனும் அணுகுவது மிகவும் முக்கியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த தலைமுறையினரும் இன, சமய நல்லிணக்கத்தை அனுபவிக்க வேண்டும் என்ற இலக்குடன் அரசாங்கம் அதற்குத் தேவையான திட்டங்களைப் புதுப்பிக்கிறது.

இதுவரை இனம், சமயம் தொடர்பான சர்ச்சைகளை சிங்கப்பூரர்களின் சார்பாக அரசாங்கம் தீர்த்து வைத்துள்ளது.

ஆனால் இதுதொடர்பாக சிங்கப்பூரர்களின் ஆதரவும் நம்பிக்கையும் அரசாங்கத்துக்குத் தேவை.

நீண்டகாலமாக விவாதிக்கப்படும் இன ஒருங்கிணைப்புக் கொள்கை, சிறப்பு உதவித் திட்டம் போன்றவை அண்மையில் பெரிதும் பேசப்பட்டன.

குடியிருப்புப் பேட்டைகளில் பல இன மக்கள் ஒன்றாக வசிப்பதை உறுதி செய்ய இன ஒருங்கிணைப்புத் திட்டம் மிகவும் முக்கியம் என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.