கே கே மகளிர் சிறார் மருத்துவமனையில் மூன்று வயது பிள்ளை ஒன்று கொவிட்-19 கிருமித்தொற்றால் இறந்ததாகக் குறிப்பிடும் பேஸ்புக் பதிவுக்கு எதிராக சுகாதார அமைச்சு, பொய்ச்செய்திக்கு எதிரான சட்டத்தைப் பயன்படுத்தியுள்ளது.
இதன் தொடர்பிலான திருத்த உத்தரவை ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அனுப்ப சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் போஃப்மா அலுவலகத்தைக் கேட்டுக்கொண்டார். இதன்படி, சரியான தகவல்களைக் காட்டும் இணைப்பைக் கொண்ட திருத்தக் குறிப்பு பேஸ்புக்கில் பயன்படுத்தப்படவேண்டும்.
சிங்கப்பூரில் தற்போது 'டெல்ட்டா பிளஸ்' என்ற உருமாறிய கொரோனா கிருமி இருப்பதாகவும் அந்தக் கிருமித்தொற்றால் நேர்ந்த பிள்ளையின் மரணத்தை அரசாங்கம் மூடி மறைத்திருப்பதாகவும் இலீன் லோ என்பவர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்தப் பதிவில் உள்ள தகவல்கள் பொய்யானவை என்று சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. 'டெல்ட்டா பிளஸ்' கிருமி வகை சிங்கப்பூரில் இல்லை என்றும் கே கே மருத்துவமனையில் இக்கிருமியால் எந்தப் பிள்ளையும் இறக்கவில்லை என்றும் அமைச்சு கூறியது.