செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
7430f5f5-2fb7-4024-ab11-17fe5461d276
-

ஆனந்த பவன் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசளிப்பு விழா

ஆனந்த பவன் உணவகத்தின் ஆதரவுடன் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், 12வது ஆண்டாக நடத்தும் ஆனந்த பவன் அமரர் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா வரும் 22ஆம் தேதியன்று மாலை ஆறு மணிக்கு நடைபெற இருக்கிறது. இவ்வாண்டு கட்டுரை நூலுக்குப் பரிசு வழங்கப்படுகிறது. பரிசளிப்பு விழாவில் வளர்தமிழ் இயக்கத் தலைவர் திரு. எஸ். மனோகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். நடுவர்களில் ஒருவராகப் பணியாற்றிய மலாயாப் பல்கலைக்கழக மொழி மற்றும் மொழியியல் துறையின் மூத்த விரிவுரையாளர் முனைவர் மலர்விழி சின்னையாவும் உரையாற்றவிருக்கிறார். சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் இணை விரிவுரையாளராகப் பணியாற்றிவரும் முனைவர் ந.செல்லக்கிருஷ்ணன் 'பாரதியாரின் கட்டுரைகள்' எனும் தலைப்பில் சிறப்புச் சிற்றுரை ஆற்றுவார்.

Zoom Meeting ID: 822 2081 3361 அல்லது http://youtube.com/c/singaporetamilwriters யூடியூப் நேரலை வழி நிகழ்வில் இணைந்திடலாம்.

ஆய்வு: உயரும் கடல்மட்டத்துக்கு

எதிராக சதுப்புநிலங்களின் பயன்

பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைக்கச் சதுப்புநிலங்கள் உதவலாம். இதனால் வடமேற்குப் பகுதியில் உயரும் கடல்மட்டத்திற்கு எதிராக இயற்கையான இந்தத் தற்காப்பு ஆயுதத்தைப் பயன்படுத்துவது குறித்து சிங்கப்பூர் ஆராய்ந்து வருகிறது. பொதுப் பயனீட்டுக் கழகம் (பியுபி) கடந்த மாதம் இந்த ஆய்வுக்கான ஏலக்குத்தகையைக் கோரியது. துவாஸ் சோதனைச்சாவடிக்கும் லிம் சூ காங் துறைமுகத்திற்கும் இடைப்பட்ட 24 கிலோமீட்டர் கடலோரப் பகுதிக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் திட்டமிடவும் நடைமுறைப்படுத்தவும் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் வழிகோலும் என்று கூறப்படுகிறது.

இப்பகுதியில் அமைந்துள்ள முக்கியமான உள்கட்டமைப்பில் பியுபியின் நான்கு நீர்த்தேக்கங்கள் அமைந்துள்ளன. அத்துடன் ராணுவத் தளங்கள், பண்ணைகள் ஆகியவையும் இப்பகுதியில் உள்ளன. இம்மாதம் 9ஆம் தேதியன்று பருவநிலை மாற்றத்துக்கான ஐக்கிய நாட்டு அனைத்துலக அரசாங்கப் பணிக்குழு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பருவநிலை மாற்றத்தால் கடல்மட்டம் உயர்வது துரிதமாவதாக எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில், இயற்கையாகவே இப்பிரச்சினையைக் களையும் ஆற்றல் சதுப்புநிலங்களுக்கு உண்டு என்ற நிலையில் சிங்கப்பூர் இந்த ஆராய்ச்சி முயற்சியில் இறங்கியுள்ளது.