நீங்கள் சென்றிருந்த ஓர் உணவங்காடி நிலையத்தில் கொவிட்-19 கிருமித்தொற்றுக் குழுமம் ஒன்று உருவாகி இருக்கலாம். அல்லது விமானத்திலோ உல்லாசக் கப்பலிலோ பயணம் மேற்கொள்வதற்கு முன், மன அமைதிக்காக ஒரு சிறு சோதனை.
பிள்ளைக்குத் தொண்டை எரிச்சல், வீட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஒரு முதியவர் என உருவாகக்கூடிய பல்வேறு சூழல்களில் வருகையாளர்கள் தொடர்பில் நீங்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க நினைக்கலாம்.
இந்தச் சூழல்கள் அனைத்திலும் கொவிட்-19 ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனை (ஆர்ட்) செய்துகொள்வதற்கான சுய பரிசோதனை சாதனம் உதவும்.
இவ்வாண்டு ஜூன் மாத நிலவரப்படி, இத்தகைய சுய பரிசோதனை சாதனங்கள் ஐந்திற்கு சுகாதார அறிவியல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. அதனால், ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தினால்கூட அது நம்பகமான முடிவைத் தரும் எனலாம்.
ஒவ்வொன்றின் விலையும் 8 வெள்ளிமுதல் 13 வெள்ளிவரை உள்ளது.
பொதுவாக ஐந்து பரிசோதனை சாதனங்களிலும் ஒரு சில குறைபாடுகள் உள்ளன. உதாரணத்திற்குப் பயன்படுத்தும் வழிமுறை, ஆங்கில மொழியில் மட்டும் விளக்கப்பட்டிருப்பது ஒன்று.
இந்நிலையில், மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடியதாகவும் ஒரே சமயத்தில் கூடுதல் நபர்களைச் சோதிக்க முடிவதாகவும் அமைந்தது 'எஸ்டி பயோசென்சர் ஸ்டான்டர்ட் கியூ கொவிட்-19 ஏஜி ஹோம் டெஸ்ட்' (SD Biosensor Standard Q Covid-19 Ag Home Test).
பரிசோதனைக்கான திரவம் ஏற்கெனவே நிரப்பப்பட்டதால் பரிசோதனையைச் செய்துகொள்பவர் அதைச் செய்யத் தேவையில்லை. மேலும், பயன்படுத்தும் வழிமுறையை விளக்கும் காணொளி ஒன்று நன்கு புரிந்துகொள்ளும் வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பரிசோதனைக்குப் பின் அப்புறப்படுத்தப் பைகள், அடையாளமோ, பெயரோ குறிக்க நெகிழியால் அமைந்த சாதனம் போன்ற அம்சங்களும் குறிப்பிடத்தக்கவை.
பரிசோதனையின்போது ஒழுங்குமுறையுடன் பொருட்களை வைத்திருக்க 'எபோட் பேன்பயோ' (Abbott Panbio) மற்றும் 'குவிடெல் குவிக்வியூ அட் ஹோம் ஓடிசி கொவிட்-19 டெஸ்ட்' (Quidel QuickVue At-Home OTC COVID-19 Test) ஆகிய பரிசோதனை சாதனங்கள் உதவுகின்றன.
அத்துடன் பயன்படுத்துவதற்கான வழிமுறை, இரண்டுக்கும் நன்கு விளக்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ளன.
வெளிப்புறப் பயன்பாட்டுக்கு 'குவிடெல் குவிக்வியூ' ஏற்றதாக உள்ளது. பயன்படுத்தும் வழிமுறை தெளிவான எழுத்துருவில் அச்சிடப்பட்டுள்ளது. அச்சிடப்பட்ட தாள் வண்ணத்தில் இருப்பதுடன் தண்ணீர் பட்டாலும் சேதமடையாத கனத்துடன் உள்ளது.
இருப்பினும், இதைப் பயன்படுத்துவோர், இடையில் சற்று நேரம் நிறுத்திக் காத்திருந்துவிட்டு மீண்டும் தொடரவேண்டும். மற்ற பரிசோதனை சாதனங்களுக்கு இவ்வாறு இடையில் காத்திருக்கத் தேவை இல்லை.
நீங்கள் அருகில் கண்காணிப்பதற்கு இல்லாமல் போனால் வீட்டில் மற்றவர்கள் எளிதில் பயன்படுத்தக்கூடியதாக உள்ளவை 'எஸ்டி பயோசென்சர் ஸ்டான்டர்ட் கியூ கொவிட்-19 ஏஜி ஹோம் டெஸ்ட்' மற்றும் 'எஸ்டி பயோசென்சர் சார்ஸ்-கொவ்-2 ஆன்டிஜன் செல்ஃப் டெஸ்ட் நேசல்' (SD Biosensor Sars-CoV-2 Antigen Self Test Nasal) எனலாம்.
இவற்றுக்குத் தரப்படும் 'கியூஆர்' குறியீட்டை வருடினால் பரிசோதனையை மேற்கொள்ளும் காணொளி விளக்கத்திற்கு அது கொண்டு செல்லும்.
நிறுவனங்களுக்கான விற்பனைக்கு மட்டும் தற்போது ஐந்தாவது பரிசோதனை சாதனமான 'பிடி வெரிட்டர் அட் ஹோம் கொவிட்-19 டெஸ்ட்' (BD Veritor At-Home Covid-19 Test) பயன்படுத்தப்படுகிறது.

