சிங்கப்பூரில் முதல் பாண்டா கரடி பிறந்தது

2 mins read
d76c034f-d10c-4a8f-83ac-8bba777edf99
குட்டி பிறந்ததும் அதைத் தன் வாயில் கௌவிக்கொண்டு உடனே அரவணைத்துப் பராமரிக்கத் தயாரானது தாயார் ஜியா ஜியா. படம்: சிங்கப்பூர் வனவிலங்குகள் காப்பகம் -

சிங்­கப்­பூ­ரின் முதல் பாண்டா கரடி நேற்று பிறந்­தது. ரிவர் சஃபாரி­யில் நேற்று காலை சுமார் 7.50 மணிக்கு காய் காய், ஜியா ஜியா பாண்டா கர­டி­க­ளுக்கு 200 கிராம் எடை­யு­டைய அந்­தக் குட்டி பிறந்­தது.

தொடர்ந்து நடை­பெற்­று­வ­ரும் தேசிய தினக் கொண்­டாட்­டங்­களுக்கு முத்­தாய்ப்­பாக பாண்டா குட்­டி­யின் பிறப்பு உள்­ள­தாக ரிவர் சஃபாரியை நடத்­தும் சிங்­கப்­பூர் வன­வி­லங்­கு­கள் காப்­ப­கம் அதன் அறிக்­கை­யில் நேற்று குறிப்­பிட்­டது.

பாண்டா குட்டி ஆணா, பெண்ணா என்­பது இன்­னும் உறு­தி­யா­க­வில்லை என்­றும் பின்­னர் அது அறி­விக்­கப்­படும் என்­றும் நேற்­றைய அறிக்கை தெரி­வித்­திருந்­தது. குட்­டி­யும் அம்மா ஜியா ஜியா­வும் தனி­யொரு இடத்­தில் உள்­ளன. அவற்­றுக்கு இடையே பிணைப்பு ஏற்­ப­ட­வும் குட்­டியை அதன் அன்னை பார்த்­துக்­கொள்­ள­வும் இந்த ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக காப்­ப­கம் விளக்­கி­யது.

ஜியா ஜியா, காய் காய் இரண்­டும் 2015ஆம் ஆண்­டு­மு­தல் இனப்­பெ­ருக்­கம் செய்ய முயன்று வந்­தன. ஏழா­வது முறை வெற்­றி­க­ர­மாக அமைந்­து­விட்­டது என்று சொல்­வதே பொருந்­தும். கூண்­டில் அடைக்­கப்­பட்ட நிலை­யில், இனப்­பெ­ருக்­கம் செய்­வது ராட்­சத பாண்டா கர­டி­க­ளுக்­குச் சிர­ம­மான ஒன்றே.

இந்­நி­லை­யில் 13 வயது காய் காய், 12 வயது ஜியா ஜியா இரண்­டும் இவ்­வாண்டு ஏப்­ரல் மாதம் இனப்­பெ­ருக்­கத்­திற்­குத் தயா­ராக உள்­ள­தன் அறி­கு­றி­கள் தெரிந்­த­தாக காப்­ப­கம் குறிப்­பிட்­டது.

ராட்­சத பாண்­டா­வுக்­கான சீன பாது­காப்பு, ஆராய்ச்சி நிலைய நிபு­ணர்­கள் அறி­வு­றுத்­தி­ய­படி, காப்­ப­கத்­தின் விலங்கு மருத்­து­வர்­கள் செயற்­கைக் கருத்­த­ரிப்­புச் சிகிச்­சையை மேற்­கொண்­ட­னர். பாண்டா கர­டி­க­ளின் கர்ப்ப காலம் மூன்று மாதங்­கள் முதல் ஐந்து மாதங்­களுக்கு மேல் போக­லாம்.

சீனா­வி­லி­ருந்து காய் காய், ஜியா ஜியா செப்­டம்­பர் 2012ல் வர­வ­ழைக்­கப்­பட்­டன. ரிவர் சஃபாரி­யின் முக்­கிய அம்­சங்­கள் அவை என்­றும் கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, பாண்டா குட்டி பிறந்­தது குறித்து பிர­த­மர் லீ சியன் லூங்­கும் குதூ­க­லித்­தார்.

"கூண்­டில் உள்ள பாண்­டாக்­கள் இனப்­பெ­ருக்­கம் செய்­வது கடி­ன­மான ஒன்று. இது காய் காய்க்­கும் ஜியா ஜியா­வுக்­கும் ஏழா­வது முயற்சி. அவற்­றைப் பரா­ம­ரிக்­கும் பணி­யா­ளர்­க­ளுக்கு எனது பாராட்­டு­கள்," என்று திரு லீ ஃபேஸ்புக்­கில் பதி­விட்டு இருந்­தார்.