வேலையின்மை, குறைந்த வட்டி காரணங்களாக இருக்கலாம்: நிபுணர்கள்
கொவிட்-19 கொள்ளைநோய் பரவல் காலத்தில் இளையர்களின் தனிநபர் கடன்கள் அதிகரித்து உள்ளதையும் வட்டி விகிதங்கள் உயர்ந்தால் நிலைமை மோசமாகக்கூடும் என்பதையும் சிபிஎஸ் சிங்கப்பூர் கடன்பற்று கண்காணிப்புப் பிரிவு தரவுகள் தெரிவித்துள்ளன.
கடன்பற்று அட்டை (கிரெடிட் கார்ட்) மூலமான கடன்களில் கணி சமான மாற்றம் தென்படவில்லை என்றபோதிலும் 20களில் உள்ள இளையர்கள் வாங்கும் இதர வகைக் கடன்தொகைகள் கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டு முதல் அதிகரித்து வந்துள்ளது.
முப்பது வயதுக்கு உட்பட்டவர்களின் சராசரி தனிநபர் கடன் மற்றும் மிகுதிக் கடன்பற்று இருப்புகளின் விகிதம் கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டைக் காட்டிலும் இவ்வாண்டின் முதல் காலாண்டில் 23 விழுக்காடு அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர் கடன்பற்றுக் கண்காணிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
21 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட வயதினர் இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் வாங்கிய சராசரி தனிநபர் கடன்கள் மற்றும் மிகுதிக் கடன்பற்று இருப்பு ஆகியன கடந்த ஆண்டின் இதே காலப் பகுதியோடு ஒப்பிடுகையில் $49,689க்கு உயர்ந்தன.
இது 42 விழுக்காடு ஏற்றம். கடந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இந்தத் தொகை சராசரியாக $34,941ஆக இருந்தது.
சிங்கப்பூரில் அடைமானம் இல்லாத கடன்களுக்கு 2015ஆம் ஆண்டு உச்சவரம்பு கொண்டு வரப்பட்டது.
கடன் கொடுப்போருக்கும் கடன் வாங்குவோருக்கும் உதவும் பொருட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போது கடன் வாங்கும் போக்கு அதிகரித்ததற்கு குறைவான வட்டி விகிதமும் ஒரு காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.
கொவிட்-19 கால ஆதரவு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் அடைமானம் இல்லாத தனிநபர் கடன்களுக்கான அதிகபட்ச ஆண்டு வட்டி 8 விழுக்காடு என அரசாங்கம் வரம்பு விதித்ததாக சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் பட்டமேற்படிப்பு நிதித் திட்டத் துறைத் தலைவர் யு யிங்குயி கூறினார்.
இளையர்கள் தனிநபர் கடன்களை வாங்க வேலையின்மை மற்றும் குறைவான ஊதியம் ஆகியனவும் காரணமாக இருக்கலாம் என்றும் நெருக்கடியிலிருந்து தப்பிக்க அவர்கள் இவ்வாறு செய்திருக்கலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
30 வயதுக்குக் குறைந்தோரிடையிலான வேலையின்மை விகிதம் இவ்வாண்டின் முதல் காலாண்டில் குறைந்தபோதிலம் இந்த வயதுப் பிரிவினருக்கான வேலை இன்மை விகிதம் சராசரி 6.4 விழுக்காட்டைக் காட்டிலும் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது.
அதேநேரம் இளையர் வேலையின்மை விகிதம் உயர்வது என்பது தற்காலிகமானது என்று சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட லீ கோங் சியான் வர்த்தகப் பள்ளி பேராசிரியர் சோங் சாங்செங் கூறியுள்ளார்.
இளையர்களுக்கும் இளையர்களை வேலைக்கு எடுக்கும் சிறிய நிறுவனங்களுக்கும் அரசாங்கம் ஏற்கெனவே எஸ்ஜி ஒற்றுமை பயிற்சித் திட்டத்தையும் இதர நிவாரணங்களையும் அளித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
"வேலையில் இருப்பவர் என்ற கணக்கில் வந்தாலும் பகுதிநேர வேலையில் இருப்போர் அல்லது உணவு விநியோகிப்போர் போன்றோருக்குப் போதுமான ஊதியம் கிடைப்பதில்லை.
"கடந்த ஆண்டில் வேலையின்மையைத் தவிர்க்க பெரும்பாலான ஊழியர்கள் சில மணி நேர வேலைகளையும் சம்பள வெட்டையும் ஏற்க முன்வந்தனர்," என்று பேராசிரியர் சோங் தெரிவித்தார்.
இளையர் கடன் வாங்கும் நிலவரத்தின் எதிர்காலம் குறித்து ஓசிபிசி வங்கியின் தலைமைப் பொருளியல் நிபுணர் திருவாட்டி செலினா லிங் கருத்துத் தெரிவித்தார்.
"நிலைமை எப்படி மாறுகிறது என்பதைப் பொறுத்து எதிர்கால நிலவரம் அமையும். கடன் வாங்கியவர்களுக்கு வேலை கிடைத்து விட்டால் கடனை அவர்கள் திருப்பிச் செலுத்துவார்கள்.
"இல்லாவிடில் கடனைத் திருப்பித் தர இயலாமல் போய் நிலுவை ஏற்படும். வட்டி விகிதம் உயரும் நிலையும் ஏற்படலாம்," என்றார் அவர்.
கடனைத் திருப்பிச் செலுத்தாத இளையர் விகிதம் இப்போது வரை குறைவாகவே உள்ளதாகவும் வரும் காலத்தில் நிலைமை மோசமாகக் கூடுமா என்பதை இப்போது கணிப்பது கடினம் என்றும் பேராசிரியர் ருவான் கூறியுள்ளார்.