தமது இணையத்தளத்தில் ஆயுதங்கள் போன்ற பொருட்கள் விற்பனைக்கு வைக்கும் விவகாரத்தைச் சகித்துக்கொள்ளப் போவதில்லை என்று இணைய வர்த்தக நிறுவனமான 'ஷாப்பீ' கூறியுள்ளது.
அதுபோன்ற பொருட்களை தனது தளத்தில் இருந்து உடனடியாக நீக்குவதோடு இவற்றை விற்பனை செய்ய தனது தளத்தைப் பயன்படுத்தியோருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளிடம் ஷாப்பீ தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் கட்டுப்படுத்தப்பட்ட உண்மையான துப்பாக்கிகளுக்கான பாகங்கள், குண்டு துளைக்க முடியாத சட்டை போன்றவை வெளிநாட்டு விற்பனையாளர்களால் ஷாப்பீ, லஸாடா போன்ற இணைய வர்த்தகத் தளங்களில் விற்பனைக்கு விடப்பட்டது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் கவனத்துக்கு வந்தது.
இத்தகைய பொருட்களை இறக்குமதி செய்ய உரிமமும் அனுமதியும் தேவை.
"ஆயுதம் தொடர்பான பொருட்களை எங்களது தளத்தில் விற்பனை செய்ய எடுக்கப்படும் முயற்சிகளை இடைமறிக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுத்துள்ளோம். இதுபோன்ற அனுமதி பெறாத, கள்ளத் தனமான பொருட்களைக் காணும் வாடிக்கையாளர்கள் உடனடியாக விற்பனைத் தளத்தில் அதற்கென உள்ள பிரிவில் பதிவிட்டு புகார் தெரிவிக்கலாம்," என்று ஷாப்பீ பேச்சாளர் கூறினார்.
மற்றொரு இணைய வர்த்தக நிறுவனமான லஸாடாவின் பேச்சாளர் கூறுகையில், ஆயுதங்கள் தொடர்பான பொருட்கள் தங்களது தளத்தின் விற்பனைப் பட்டியலில் இடம்பெறாத வகையில் கணினி கட்டமைப்பை அன்றாடம் மேம்படுத்த உள்ளூர் அமலாக்கத் துறையினருடன் இணைந்து அணுக்கமாகப் பணியாற்றப்போவதாகத் தெரிவித்தார்.
லஸாடா இணையத்தளத்தில் குண்டு துளைக்க முடியாத சட்டையை விற்பனைக்கு வைத்திருந்த வெளிநாட்டு விற்பனையாளரை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டது. பாதுகாப்புத்தகடு பொருத்தப்பட்ட அச்சட்டையின் விலை $692 என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதனை விநியோகிப்பதில் 'சட்டப் பிரச்சினை எதுவுமில்லை' என்றும் இதற்கு முன்னர் இதுபோன்ற பொருட்கள் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

