இந்த கொரோனா கிருமிப் பரவல் காலகட்டம் மக்களுக்குத் தாளா அழுத்தத்தையும் மீளா துயரத்தையும் அளித்து வருகிறது. நாம் எந்த நிலையில் இருந்தாலும் சூழலுக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் கட்டாயத்திற்கு இந்தக் கிருமித்தொற்றுக் காலம் நம்மை அனுதினமும் தள்ளிவிடுகிறது.
தெளிவற்றதாக, உறுதியற்றதாக நமது நிலைமை தற்போது உள்ளது. வாய்விட்டு அழத் தோன்றுகிறது. கிருமி தொற்றிவிடும் என்ற அச்சம் உள்ளது. கொரோனா உலகெங்கும் வலை விரிப்பதைக் காணும்போது கோபம் வருகிறது. இப்படி ஒரே உணர்வு நமக்குள் இருப்பதில்லை. கட்டுக் கடங்காத கிருமித்தொற்று என்று நம் கண்களுக்குத் தோன்றுவதை நாம் கட்டுப்படுத்தப் பார்க்கிறோம்.
சிலர் தங்களின் அன்புக்குரியவர்களை இழக்கின்றனர். வேறு சிலர், வழக்கநிலை, உண்மைநிலை, சமுதாயத்துடனும் உலகத்துடனும் தாங்கள் கொண்டுள்ள தொடர்பு என்ன என்பதை மறந்து போகின்றனர்.
இவ்வாறு நமக்கு வேதனை அளிக்கும் உணர்வுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது ஆத்திரமே. கொவிட்-19 காரணத்தால் எளிதில் ஆத்திரமும் எரிச்சலும் அடைவதைப் பலர் உணரத் தொடங்கிவிட்டனர். அதுவும் புரிந்துகொள்ளக்கூடியதே. வேலை, வீடு, தனிப்பட்ட வாழ்க்கை என அனைத்து அம்சங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப நாம் மாறிக்கொள்வதால் இந்நிலை.
'இதுவும் கடந்து போகும்' என்று சொல்ல முடியாமல் 'இது கடந்து போகுமா' என்று கேட்கத் தோன்றுகிறது.
உதாரணத்திற்கு, சிங்கப்பூரில் நமது எம்ஆர்டி பயணத்தை எடுத்துக்கொள்வோம். காலையில் வழக்கமான பயணத்தை எதிர்பார்த்து ஒரு ரயிலில் ஏறுகிறீர்கள். ஆனால், திடீரென்று மின்சாரத் தடை ஏற்பட்டு அடுத்த நிலையத்தில் இறங்க வேண்டியுள்ளது. பேருந்து நிறுத்தத்திற்கு விரைந்தால், அங்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 'கிராப்' சவாரிப் பயணத்தில் செல்லலாம் என்றால் வருவதாகக் கூறிய ஓட்டுநர், முடியாது என்று மனதை மாற்றிக்கொண்டார். களைத்துப்போய் எம்ஆர்டி நிலையம் பக்கம் சென்றால் ரயில் சேவை மீண்டும் தொடங்கிவிட்டதை உணர்கிறீர்கள்.
நொந்துபோய் அந்த ரயிலில் ஏறுகிறீர்கள். ஒருவித நிம்மதி உணர்வு ஏற்பட்டாலும் மறுபடியும் மின்சாரத் தடை ஏற்பட்டுவிடக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறீர்கள். மறுபடியும் அது நடக்கிறது. மீண்டும் நடக்கும் சாத்தியமும் உள்ளது. நமக்குப் பிடிக்காத ஓர் உறவினர் இருப்பாரே, அதுபோல் இந்த கொவிட்-19.
நமது உணர்வுகளை ஒரு பனிப்பாறையுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
நம் கண்களுக்குப் புலப்படும் பனிப்பாறையின் ஒரு பகுதிதான், நமது உணர்வுகளின் வெளிப்பாடு. அதாவது நாம் நடந்துகொள்வது. இருப்பினும், பனிப்பாறையின் பெரும்பகுதி நீருக்கு அடியில் மறைந்திருக்கிறது. நம் உணர்வுகளுக்குத் தொடர்புடைய வலி, அச்சம் ஆகியவை அந்த மறைந்திருக்கும் உணர்வுகள் போன்றவை. நம்மால் இதிலிருந்து தப்பிக்க இயலாது. ஆனால், நிலைமையைச் சமாளிக்கும் வழிமுறையைக் கடைப்பிடிக்கலாம்.
அதற்கு உதவும் ஓர் உத்திதான் 'Recognize', 'Accept', 'Investigate', 'Nurture' எனப்படும் 'ரெய்ன்' (RAIN). இச்செயல்முறையை மிஷெல் மெக்டோனல்ட் என்பவர் உருவாக்கியுள்ளார்.
விமர்சிக்காமல், எந்த ஒரு முடிவெடுக்காமல் தன்னைச் சுற்றி நடப்பவை தொடர்பான விழிப்புணர்வு, அதனுடன் கூடிய எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைத் தக்கவைத்துக்கொள்ள இது உதவும்.
அடையாளம் காணுதல் (Recognize)
உங்களின் உணர்வுகள், பாதிப்பு ஏற்படுத்தும் நடத்தையாக மாறுவதை அடையாளம் காணுங்கள். உங்கள் உடலின் எந்தப் பகுதியில் அந்த உணர்ச்சி அடங்கிஉள்ளது என்பதை அடையாளம் காணவும் இது உதவும். கோபம் வரும்போது உங்கள் கைகளைக் கவனியுங்கள். அவற்றை நீங்கள் இறுக மூடிக்கொள்கிறீர்களா? செய்திகளைப் பார்க்கும்போதோ படிக்கும்போதோ உங்கள் மனம் கனப்பது போன்ற உணர்வு தோன்றுகிறதா?
ஏற்றுக்கொள்ளுதல் (Accept)
உங்களுக்குப் பின்னால் பேருந்தில் கூச்சல் போட்டுக்கொண்டிருக்கும் சிறுவர்களைப் பார்த்து நீங்கள் கத்தினால் தற்காலிகமாக நிசப்தம் நிலவும். ஆனால் அந்த இடத்தில் ஒருவகை பதற்றம் இருப்பதை உணர்வீர்கள். இப்படி எழக்கூடிய ஓர் உணர்ச்சியை எப்படி அடுத்த முறை கட்டுப்படுத்துவது? நிலைமையை உணர்ந்துகொண்டு, இத்தகைய உணர்ச்சிகள் இயல்பு என்று புரிந்துகொள்வதே பதில்.
உணர்ச்சிகள் அதிகமாக உணரப்படும் இடத்தில் பிறர் தம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற தேவையும் அதிகமாக இருக்கும். இதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் அதேவேளை நம் உணர்வுகளை அடக்கிக்கொண்டு நிராகரித்தால் அவை என்ன என்பதை நாம் ஏற்றுக்கொள்ளாததுபோல் ஆகிவிடும்.
ஆராய்ந்து பார்த்தல் (Investigate)
உணர்வுகளை ஏற்றுக்கொண்டதை அடுத்து உங்களுக்குள் ஏற்படும் உணர்வுகள், தாக்கம் ஆகியவற்றை ஆராயுங்கள். ஆத்திரம், சோகம் என்றால் என்ன, உங்களுக்கு எத்தகைய கிளர்ச்சி தோன்றுகிறது, உங்களுக்கும் பிறருக்கும் அதிகத் தீங்கு இழைக்காமல் அந்தக் கிளர்ச்சியை எவ்வாறு நீங்கள் கழித்துக்கட்டலாம்? இது தொடர்பில் ஒரு நிபுணரின் உதவியை நாடினால்தான் என்ன? மனநல ஆலோசகர், சமூகச் சேவையாளர் போன்றோர் இதற்காகவே உள்ளனர், உதவி நாட பல்வேறு தளங்களும் உண்டு.
பராமரித்துக்கொள்ளுதல் (Nurture)
உணர்ச்சிகளைப் பராமரித்துக்கொள்வது முக்கியம். 'எனக்கு ஏன் இப்படி தோன்றுகிறது?' என்று உங்களையே நீங்கள் விமர்சித்துக்கொண்டும் குறை கூறிக்கொண்டும் இருக்கவேண்டாம்.
உங்களுக்குள் நடக்கும் போராட்டங்கள் உண்மையானவை. அவற்றை நினைவுறுத்தும் உங்களது உணர்வுகளைக் கருத்தில் கொண்டு உங்கள் மீது நீங்களே சற்று பரிவு காட்டுங்கள்.
ஒருநாள், நிலைமை மாறும். இதுவும் கடந்து போகும். தாமதித்து நடக்கக்கூடும் ஆனால் உறுதியாக நடக்கும். அதில் நம்பிக்கை கொள்ளுங்கள்.
துவாஸ் நிலையத்திலிருந்து எம்ஆர்டியில் பயணம் செய்து இறுதியில் சாங்கி விமான நிலையத்தை அடைவது போன்றது இந்தப் பயணம். 'கிராப்' சவாரியில் சென்றால் விரைவில் அடைந்துவிடலாம். ஆனால் 'கிராப்' கிடைக்காமல் போகலாம்.
அதனால், இன்னும் கொஞ்ச காலம் பொறுத்திருங்கள்.
படிப்படியாக நாம் ஒருநாள் சாங்கியை அடைவோம். படிப்படியாக நாம் ஒருநாள் இந்த கொவிட்-19 கிருமித்தொற்றை எதிர்கொள்வோம்.
படங்கள்:
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், தேவானந்தன்
இளையர்க்கான ஆலோசனை ஆதரவு
CARE சிங்கப்பூர்
தொடர்பு எண்: 6978 2728
திங்கள்-வெள்ளி: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
TOUCHline (TOUCH சமூக சேவைகளின்கீழ் இயங்குகிறது)
தொடர்பு எண்: 1800 377 2252
திங்கள்-வெள்ளி: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
Fei Yue சமூக சேவைகள்
தொடர்புக்கு: ec2.sg (இணையவழி நேரலை உரையாடல்)
திங்கள்-வெள்ளி: காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை;
பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை

