கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு அதிக எடை தூக்கி மயங்கி விழுந்த இளையருக்கு $225,000 நிதியுதவி

கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு அதிக எடை தூக்கி மயங்கி விழுந்த இளையருக்கு $225,000 நிதியுதவி

2 mins read
25808ef0-a060-4698-8351-e3f2cd0b2c11
-

முதல் கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட பிறகு இதயத்துடிப்பு நின்றதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 16 வயது இளையரின் உடல்நிலை சீராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'விஐஎஃப்ஏபி' எனப்படும் தடுப்பூசி காய நிதியுதவித் திட்டத்தின்கீழ் அவருக்கு $225,000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அந்த இளையர் தற்போது உள்நோயாளி மறுவாழ்வு சிகிச்சை பெற்று வருகிறார். அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட அவருக்கு உதவி தேவைப்படவில்லை எனச் சுகாதார அமைச்சு இன்று (ஆகஸ்ட் 16) கூறியது.

"வரும் வாரங்களில் அந்த இளையர் வீடு திரும்பலாம். ஆனால் அதற்குப் பிறகும் அவருக்கு வெளிநோயாளி மறுவாழ்வு சிகிச்சை தேவைப்படக்கூடும். அதன் பின்னர்தான் அவரால் மீண்டும் பள்ளிக்குச் செல்லவும் மற்ற நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடியும்," என சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

இளையரைக் கவனித்துவரும் மருத்துவக் குழு அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிப்பதோடு அவரின் உடல்நிலையைக் கண்காணிக்கும்.

உடற்பயிற்சிக்கூடத்தில் அதிக எடையைத் தூக்கிய பிறகு ஜூலை 3ஆம் தேதி அந்த இளையர் வீட்டில் மயங்கி விழுந்தார். அதற்கு ஆறு நாட்களுக்கு முன்பு அவர் முதல் கொவிட்-19 ஃபைசர்-பயோஎன்டெக்/கமிர்னட்டி தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.

அவருடைய இதயத்தின் தசை வீங்கியது. அதனால் அவரது இதயத்துடிப்பு திடீரென நின்றுபோனது.

அதிக எடையைத் தூக்கி அவர் செய்த உடற்பயிற்சி உள்ளிட்ட காரணங்களால் நிலைமை மேலும் மோசமடைந்திருக்கலாம் என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

'எம்ஆர்என்ஏ' ரக தடுப்பூசியை முதல் முறையாகப் போட்டுக்கொண்ட பிறகு இதயத் தசையில் வீக்கம் ஏற்பட்டோர் அதற்குப் பிறகு அந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளக்கூடாது.