48 பேருக்குப் புதிதாகக் கிருமித்தொற்று
சிங்கப்பூரில் புதிதாக 48 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 32 பேர், முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டனர்.
முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்புடைய மற்ற ஏழு பேருக்குக் கண்காணிப்புப் பரிசோதனை மூலம் தொற்று உறுதியானதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எஞ்சிய ஒன்பது பேருக்கு எப்படி கிருமி தொற்றியது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
இந்நிலையில், வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த ஐவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 66,225ஆக உள்ளது.
இதற்கிடையே, சின் சுவீ சாலையில் உள்ள மை ஃபர்ஸ்ட் ஸ்கூல் பாலர் பள்ளியில் நேற்று முன்தின நிலவரப்படி கொவிட்-19 தொற்றுக் குழுமம் 31 பேராக உயர்ந்தது.
தடுப்பூசி பக்கவிளைவு விகிதம் 0.12 விழுக்காடு
தேசிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் கொவிட்-19 தடுப்பூசிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பக்கவிளைவுகளின் விகிதம் 0.12 விழுக்காடாக உள்ளதென்று சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேசிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் ஃபைசர், மொடர்னா தடுப்பூசிகளின் பாதுகாப்பு குறித்து நான்காவது முறையாக தகவல் அளிக்கும் இந்த அறிக்கை, சிறப்பு அனுமதியின்கீழ் செலுத்தப்படும் சினொவேக் தடுப்பூசியையும் இம்முறை உள்ளடக்கியது. தேசிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் இதுவரை மொத்தம் 7,567,466 அளவு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அவற்றில், தடுப்பூசிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 9,403 பக்கவிளைவுச் சம்பவங்கள் குறித்து ஆணையத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.
ஜூலை 31ஆம் தேதி நிலவரப்படி அவற்றில் 389 சம்பவங்கள் கடுமையான பக்கவிளைவுகள் சம்பந்தப்பட்டவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மக்களுக்கு இதுவரை போடப்பட்டுள்ள தடுப்பூசிகளில் இது 0.005 விழுக்காடாகும். சினொவேக் தடுப்பூசியைப் பொறுத்தவரை, தடுப்பூசிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 47 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் கடுமையான பக்கவிளைவுகள் எனக் கூறப்படும் நான்கு சம்பவங்களும் அடங்கும்.

