சிங்போஸ்ட் நிறுவனம், 2026ஆம் ஆண்டுக்குள் தனது அனைத்து சிறிய வாகனங்களையும் மின் வாகனங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளது.
அதனையொட்டி இப்போதே இரண்டு வகை மின் ஸ்கூட்டர்களையும் இரண்டு வகை மின் வேன்களையும் அது முன்னோட்ட சோதனையில் ஈடுபடுத்தியுள்ளது.
தற்போது சிங்போஸ்ட் 700 மோட்டார்சைக்கிள்களையும் ஸ்கூட்டர்களையும் பயன்படுத்திவருகிறது. அவற்றுக்குப் பதிலாக 'ஐயோனா ஆர்ஏபி' ரக மூன்று சக்கர மின் ஸ்கூட்டரைப் பயன்படுத்துவது குறித்து அது ஆலோசித்துவருகிறது.
பெட்ரோலில் இயங்கும் அதன் 140 வேன்களுக்குப் பதிலாக 'பிவைடி டி3' ரக மின் வேன்களைப் பயன்படுத்தவும் சிங்போஸ்ட் எண்ணம் கொண்டுள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் கரிம வெளியேற்றத்தை 35 விழுக்காடு குறைப்பது நிறுவனத்தின் இலக்கு.
ஆன்சன் ரோடு- ஷென்டன் வே, எமரால்ட்-கேர்ன்ஹில் ஆகிய பாதைகளில் சிங்போஸ்ட் 'ஐயோனா ஆர்ஏபி' ரக மின் ஸ்கூட்டர்களைப் பயன்படுத்தி சோதித்துப் பார்க்கவுள்ளது. சாதாரண வாகனங்களைக் காட்டிலும் இந்த மின் ஸ்கூட்டர்கள் சுமார் 75 விழுக்காடு கரிம வெளியேற்றத்தைக் குறைக்கும் என்றும் 'பிவைடி டி3' ரக மின் வேன்கள் சுமார் 50 விழுக்காடு கரிம வெளியேற்றத்தைக் குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.
தனது அனைத்து கனரக வாகனங்களையும் மின் வாகனங்களாக மாற்றவும் பல்வேறு விநியோகிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக சிங்போஸ்ட் தெரிவித்தது.
சிங்போஸ்ட், ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் முற்றிலுமாக மின் வாகனங்களைப் பயன்படுத்தும் எண்ணம் கொண்டுள்ள முதல் அஞ்சல் சேவை ஆகும்.
மக்கள், வர்த்தகர்கள் ஆகிய இரு தரப்பினரின் அஞ்சல் தேவைகள் மாறிவரும் நிலையில், அவற்றுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ள சிங்போஸ்ட் முயற்சி செய்வதை அதன் மின் வாகனச் சோதனைகள் காட்டுவதாகத் தேசிய வளர்ச்சித் துறை, தொடர்பு, தகவல் துறை ஆகியவற்றுக்கான மூத்த துணையமைச்சர் டான் கியட் ஹாவ் கூறினார்.

