செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
b76a5fbb-1dac-4ccf-b7ec-691a73c32a35
-

'காப்புறுதி நிறுவனத்தை $780 மி. தொகைக்கு வாங்கும் 'ஹெச்எஸ்பிசி'

ஹெச்எஸ்பிசி வங்கி, ஏஎக்ஸ்ஏ நிறுவனத்தின் சிங்கப்பூர் காப்புறுதி வர்த்தகத்தை $780 மில்லியனுக்கு (US$575 மில்லியன்) வாங்க முன்வந்துள்ளது. அரசாங்க அனுமதி பெறும் பட்சத்தில், ஹெச்எஸ்பிசி வங்கியின் ஆசிய பசிபிக் காப்புறுதி துணை நிறுவனம், ஏஎக்ஸ்ஏ சிங்கப்பூர் காப்புறுதி வர்த்தகத்தின் 100 விழுக்காட்டு பங்குகளை வாங்கும்.

ஏக்ஸ்ஏ சிங்கப்பூர், இங்கு வாழ்நாள் காப்புறுதி சந்தாக்களை வழங்கும் எட்டாவது பெரிய நிறுவனம் ஆகும். சொத்து மற்றும் காயமுற்றல் காப்புறுதிகளில் அது ஐந்தாவது பெரிய நிறுவனமாக உள்ளது.

ஏஎக்ஸ்ஏ நிறுவனத்தின் விற்பனை முடிவுறும்போது, அதன் காப்புறுதிகளின் பெயர்கள் ஹெச்எஸ்பிசி காப்புறுதிகளாக பெயர் மாற்றப்படும். ஆனால் காப்புறுதி திட்டங்களின் விதிமுறைகளும் நிபந்தனைகளும் மாற்றப் படாது என்று அறிவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.

ஆஸ்திரேலியாவில் கால்பதிக்கும் கம்ஃபர்ட் டெல்குரோ நிறுவனம்

'கம்ஃபர்ட் டெல்குரோ' நிறுவனம் இவ்வாண்டு இறுதிக்குள் அதன் துணை நிறுவனத்தை ஆஸ்திரேலியாவில் தொடங்கத் திட்டமிட்டு வருகிறது.

'கம்ஃபர்ட் டெல்குரோ கார்ப் ஆஸ்திரேலியா' எனும் பெயர்கொண்ட அந்த நிறுவனம் ஆஸ்திரேலியப் பங்குச்சந்தையில் இடம்பெற்றிருக்கும்.

ஆஸ்திரேலியாவில் தான் வைத்திருக்கும் குறிப்பிடத்தக்க நிலப் போக்குவரத்து வர்த்தகச் சொத்துகளின் மதிப்பைக் கூட்ட அந்த நடவடிக்கை உதவும் என்று 'கம்ஃபர்ட் டெல்குரோ' நிறுவனம் கூறியது. அந்நிறுவனம், ஆஸ்திரேலியாவில் சுமார் $1.23 பில்லியன் மதிப்புள்ள நீ்ண்டகால சொத்துகளை வைத்துள்ளது. கம்ஃபர்ட் டெல்குரோ தற்போது ஆஸ்திரலியாவில் உள்ள ஆறு மாநிலங்களில் செயல்படுகிறது.

பழைய கலங்கரை விளக்கங்களைப் பாதுகாப்பது பற்றிய ஆய்வு

இங்குள்ள மூன்று கலங்கரை விளக்கங்களை, கடல் நீர்மட்ட உயர்வு வருங்காலத்தில் பாதிக்காமல் இருப்பதற்காக சிங்கப்பூர் கடற்துறை, துறைமுக ஆணையம் முன்னெச்செரிக்கை நடவடிக் கையை எடுக்கவுள்ளது.

சுல்தான் ஷோயல் (படம்), புலாவ் சத்துமாத்து, பெட்ரா பிரான்கா ஆகிய கலங்கரை விளக்கங்களுக்கு பருவநிலை மாற்றத்தாலும் அலைகளின் தாக்கத்தாலும் ஏற்படக்கூடிய சவால்கள் பற்றி பொறியியல் ஆய்வை ஆணையம் நடத்தும்.

1800களில் கட்டப்பட்ட இந்த மூன்று கலங்கரை விளக்கங்களுக்கும் தற்போதைக்கு கடல் நீர் மட்ட உயர்வால் ஆபத்து ஏதும் இல்லை என்று ஆணையத்தின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தார். வருங்கால பாதிப்புகளையும் அதற்கான தீர்வுகளையும் ஆய்வு முன்வைக்கும் என்றார் அவர்.

சிங்கப்பூரின் 200 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரைக்கு கடல்நீர் மட்ட உயர்வால் ஏற்படக்கூடிய பாதிப்பு ஏற்கெனவே நான்கு ஆய்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நீர்த்தேக்கத்தில் பெரிய சூரிய மின்சக்தி ஆலைகளுக்கு திட்டம்

சிங்கப்பூரில் மேலும் இரண்டு நீர்த்தேக்கங்களில் பெரிய சூரிய சக்தி ஆலைகளை அமைப்பது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

லோவர் செலேத்தோர் நீர்தேக்கத்தில் 100 மெகவாட்-பீக் அளவிலும் பாண்டான் நீர்த்தேக்கத்தில் 44 மெகவாட்-பீக் அளவிலும் மிதக்கும் சூரிய சக்தி ஆலைகளை அமைக்க திட்டம் உள்ளதாக பொதுப் பயனீட்டுக் கழகம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறியது.

இந்த இடங்களில் சூரிய சக்தி ஆலைகள் அமைக்கும் சாத்தியக்கூறுகள் பற்றிய ஆய்வு, வரும் நவம்பரில் தொடங்கி இரண்டு ஆண்டுகளில் முடிவுறும். இத்திட்டங்கள் மின்சக்தி தயாரிப்பை சுற்றுச்சூழலுக்கு உகந்த வழிகளில் தயாரிக்க உதவும் என்று கழகம் தெரிவித்தது. சிங்கப்பூரின் முதல் பெரிய அளவிலான சூரிய சக்தி ஆலை தெங்கே நீர்த்தேக்கத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டது.