ஓய்வு வயதைக் கடந்த மூத்த ஊழியர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்தியது, ஊழியர்கள் வேறு திறன்களைப் பெற அவர்களைப் பயிற்சிக்கு அனுப்பியது போன்ற முற்போக்கான வேலை நடைமுறை களைப் பின்பற்றிய முதலாளிகளுக்கு நேற்று விருதுகள் வழங்கப்பட்டன.
நடுநிலையான, நியாயமான வேலைவாய்ப்பு நடைமுறைகள் குறித்த முத்தரப்பு கூட்டணியின் வழிகாட்டிகளின்படி செயல்பட்டு வரும் 21 அமைப்புகளும் 6 தனி நபர்களும் நேற்று கௌரவிக்கப்பட்டனர்.
புருடென்ஷியல் காப்புறுதி நிறுவனமும் விருதுபெற்ற நிறுவனங்களில் ஒன்றாகும்.
அறுபத்து இரண்டு வயதில் ஓய்வு எனும் வரம்பை அந்நிறுவனம் 2018இல் அகற்றியது. மேலும், ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு வயது உச்சவரம்பை நூறாக உயர்த்தியது போன்ற நடவடிக்கைகளை அது எடுத்துள்ளது.
மூத்த ஊழியர்களை ஏற்றுக்கொள்ளும் நடைமுறை நீண்டகால நோக்கில் பயன்தரும் என்று நிறுவனம் நம்புவதாக புருடென்ஷியல் அஷூரன்ஸ் சிங்கப்பூர் நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி திருவாட்டி ஷீலா பரக்கல் கூறினார்.
மூத்த ஊழியர்களின் அனுபவத்தைப் பயன்படுத்திக்கொள்ள அந்த நடைமுறை உதவும் என்றார் அவர்.
இணையம் வழியாகவும் நேரடியாகவும் நேற்று நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லேங், புதிய முத்தரப்பு கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.
ஊழியர் அணி, முதலாளிகள் ஆகிய தரப்புகளின் பிரச்சினைகள் பற்றி, முத்தரப்புப் பங்காளிகளும் கல்வியாளர்கள், ஊடகத் துறையினர், வழக்கறிஞர்கள் ஆகியோரும் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள இக்கூட்டமைப்பு உதவும் என்று டாக்டர் டான் கூறினார்.
நிகழ்ச்சியில் இங்கு கடைப் பிடிக்கப்பட்டு வரும் முற்போக்கான வேலை நடைமுறைகள் பற்றிய அறிக்கையும் வெளியிடப்பட்டது.

