சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழக (எஸ்யுஎஸ்எஸ்) ஆய்வாளர்கள் சிங்கப்பூரர்கள் எவ்வாறு தங்கள் நேரத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள ஐந்துஆண்டுகால ஆய்வைச் செய்யவுள்ளனர்.
அந்த ஆய்வில் 1,000 குடும்பங்கள் அல்லது 3,000 தனிநபர்கள் கலந்துகொள்வார்கள் என்று பல்கலைக்கழகம் நேற்று நடந்த ஆய்வுநிதி வழங்கும் நிகழ்ச்சியில் தெரிவித்தது. அதில் இந்த ஆய்வுக்கான $2.2 மில்லியன் நிதியை வழங்குவதற்கு, தேசிய சமூக சேவைகள் மன்றமும் நீ ஆன் கொங்சி அமைப்பும் ஓர் உடன்பாட்டில் கையெழுத்திட்டன.
கொவிட்-19 பெருந்தொற்று, அதன் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் சிங்கப்பூரர்களின் வழக்கமான செயல்கள், சமூக நடவடிக்கைகள், மூத்தோருக்கும் பிள்ளைகளுக்குமான பராமரிப்பு போன்ற அம்சங்கள் எவ்வாறு மாறியுள்ளன என்பதை அந்த ஆய்வு ஆராயும்.
சிங்கப்பூரரர்கள் வீட்டிலும் பள்ளி அல்லது வேலையிடத்திலும் எவ்வளவு நேரத்தைச் செலவிடுகிறார்கள் என்பதும் அதுகுறித்த அவர்களின் எண்ணப்போக்கும் ஆராயப்படும்.
நேற்றைய நிதி வழங்கும் நிகழ்ச்சியில் கல்வி, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளுக்கான துணை அமைச்சர் திருவாட்டி சன் சுவேலிங் கலந்துகொண்டார்.
கள நிலவரத்தை அறிந்து கொண்டு நல்ல கொள்கைகளளை வகுக்க இந்த ஆய்வு அதிகாரி களுக்கு உதவும் என்றார் பல் கலைக்கழகத்தின் தலைவர் திரு சியோங் யீ கியட்.
சிங்கப்பூரர்கள் ஒதுக்கும் நேரத்தைக் கொண்டு அவர்கள் எந்த அம்சங்களை முக்கியமாகக் கருதுகிறார்கள் என்பதைக் கணிக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

