பன்முகக் கலைஞர் ஆனந்த கண்ணன் மறைவு

பன்முகக் கலைஞர் ஆனந்த கண்ணன் மறைவு

4 mins read
5a869e68-0193-4eff-abe7-848ce470a010
-
multi-img1 of 3

நாடகக் கலைஞர், தொலைக்காட்சிப் படைப்பாளர், நடிகர், நாடக இயக்குநர் என பன்முகங்களைக் கொண்ட உள்ளூர் கலைஞர் கோ. ஆனந்த கண்ணன் காலமானார். புற்றுநோயால் சிறிது காலம் நோய் வாய்ப்பட்டிருந்த அவர் நேற்று முன்தினம் பின்னிரவு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 48.

தமது பதின்ம வயதிலேயே 'சிறுவர் மேடை' போன்ற வானொலி நாடகங்களையும், 'சிறுவர்கள் நாங்கள்' போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் வழிநடத்தினார்.இளமை காலத்திலேயே நாடகக் கலையில் அதீத நாட்டம் கொண்ட திரு ஆனந்த கண்ணன் சிங்கப்பூரின் ரவீந்திரன் நாடகக் குழுவில் நடித்து பின்பு உள்ளூர் தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்து பிரபலமானார். பிறகு திரு ஆனந்த கண்ணன் தமிழகத்தில் வானொலியில் படைப்பாளராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். அதன் பின்னர் 2000த்தைத் தொடர்ந்த ஆண்டுகளில் அங்கு 'சன் மியூ சிக்' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் படைப்பாளராகி உலகத் தமிழ் மக்களிடையே பிரபலமானார்.

1988ல் ரவீந்திரன் எழுதிய 'குடும்பத்தின் அறைகள்' என்ற மேடை நாடகத்தில் முதன் முறையாக முக்கிய காதாபாத்திரத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தார்.1990ல் நடந்த இந்திய கலாசார மாதத்திற்கான சிறந்த நடிகர் விருதை பெற்ற அவர், விருதிற்காக கிடைத்த பரிசுத் தொகையை, மேலும் அதிகமான தமிழ் நாடகங்களைத் தயாரிக்க பயன்படுத்தினார்.

புத்தாக்க சிந்தனை நிறைந்த தனது படைப்புகளின் வழி பலரின் சிந்தனைகளைத் தூண்டும் திறன் அவரிடம் இருந்ததாக கூறினார் திரு வடிவழகன்.

'காண்போம் கற்போம்!' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருவரும் முதன் முறையாக சேர்ந்து படைத்த அனுபவங்களை நினைவுகூர்ந்த திரு வடிவழகன், இறுதியாக 2019ஆம் ஆண்டு திரு ஆனந்த கண்ணனின் 'கரகம்' என்னும் பாரம்பரிய மேடை நடன, நாடக நிகழ்ச்சியில் அவருடன் சேர்ந்து பணியாற்றினார்.

"அவனை நான் 'தமிழ் எழுச்சி கலைஞன்' என்று அழைப்பேன். சிங்கப்பூரில் தமிழ் சார்ந்த எழுச்சியை ஊட்டியிருக்கிறான். கலைகளை முறையாக கற்றுக்கொண்டு, முறையாகக் கற்றுக்கொடுத்தான். இந்த இழப்பு சிங்கப்பூர் இந்திய கலைத் துறைக்கு ஒரு பேரிழப்பு," என்றார் திரு வடிவழகன்.

தமிழ்நாட்டின் சன் டிவியில் 'சிந்துபாத்' என்ற குழந்தைகளை கவரும் நாடகத்தில் நடித்தார் ஆனந்த கண்ணன். அதன் மூலம் பல சிறார்களையும் அவர் அதிகமாகக் கவர்ந்தார். 'இத்தனை நாளாய் எங்கிருந்தாய்', 'அதிசய உலகம் 3D' போன்ற சில திரைப்படங்களிலும் அவர் நடித்தார்.

மாலை மதுரம், காண்போம் கற்போம், அமளி துமளி, ஊர்க்குருவி, சூப்பர்ஸ்டார் சேலஞ், சவால் சிங்கப்பூர், சுவை போன்ற பல உள்ளூர் நிகழ்ச்சிகள் திரு ஆனந்த கண்ணன் படைத்தவை, நடித்தவை. சிங்கப்பூரில் 2011ஆம் ஆண்டின் 'பிரதான விழா'வில் அவர் தொகுத்து வழங்கிய ஊர்க்குருவி நிகழ்ச்சிக்காக சிறந்த படைப்பாளர் விருதைப் பெற்றார்.

மரபுக்கலைகளை வளர்க்கும் கலைஞராக, குறிப்பாக சிங்கப்பூரில் வில்லுப்பாட்டு, பொய்க் கால் குதிரை, மயிலாட்டம், கரகாட்டம் போன்ற பாரம்பரிய கிராமிய கலைகளை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தார் திரு ஆனந்த கண்ணன்.

கூத்துப்பட்டறை ந.முத்துசாமி அவர்களின் மாணவரான இவர், தேசியக் கலைகள் மன்றத்தின் ஆதரவில் 2017ஆம் ஆண்டு இந்தியாவுக்குச் சென்று மரபுக்கலை பயின்றவர். பல மேடை நாடகங்களை எழுதியும் இயக்கியும் உள்ளார்.

அவர் நிறுவிய AK தியேட்டர் (AK Theatre) நாடகக் குழுவின் மூலம் நாடகக் கலையையும் தமிழ் மொழியையும் மாணவர்களிடம் எளிமையான முறையில் கொண்டுசேர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டார். AK தியேட்டர் நாடகக் குழுவில் மனைவி நாகராணி (48), மகள் அவா கண்ணன் (19), நெருங்கிய நண்பர் ராஜேஷ் கண்ணன் ஆகியோருடன் இணைந்து மரபு வழி கலைகளை முறையாக கற்று பாரம்பரிய தமிழ் கலைகளின் பெருமையைப் பறைசாற்றியவர்.

"நான்கு வருடங்களாகத்தான் எனக்கு அவரை தெரியும். 'சீவகன்' என்னும் ஒரு நாடகத்தின் மூலம் அவருக்கு அறிமுகமானேன். அதிலிருந்து ஓர் இளைஞனாக எனக்கு நிறைய வாய்ப்புகளை வழங்கியுள்ளார். அவர் இளைஞர்கள் மீது அதீத நம்பிக்கையும் அன்பும் கொண்டிருந்தார். எங்களுடன் தமிழ் மொழியைப் பற்றியும் தமிழ் கலைகளின் எதிர்காலத்தைப் பற்றியும் நிறைய பேசுவார். முக்கியமாக இளைஞர்களிடையே மரபுக் கலைகளை எவ்வாறு கொண்டுசேர்க்கலாம் என்பதை சிந்தித்துக்கொண்டே இருப்பார். நேர்மறை சிந்தனையாளர். எல்லோருக்கும் ஊக்கம் கொடுத்து, அவர் இருக்கும் இடமெல்லாம் கலகல வென்று இருக்கும்படி செய்வார்," என்றார் AK தியேட்டரில் உறுப்பினராக இருக்கும் சுப்பு அடைக்கலவன்.

திரு ஆனந்த கண்ணன் நிர்வாகத்தில், 'ஆனந்த கூத்து' என்று அழைக்கப்படும் இந்திய பாரம்பரிய கலைகளில் பட்டயக் கல்வி சான்றிதழ் பெரும் கல்வி திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. இது, சிங்கப்பூர் தமிழ் மொழி மற்றும் கலாசார வளர்ச்சியில் முக்கிய அங்கத்தை வகிக்கும் என்றார் திரு வடிவழகன்.

30 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்க் கலை உலகில் தமது நடிப்பு, படைப்பாற்றல் திறன்களாலும் தமிழ் மொழி, தமிழ் மரபுக் கலை மீதுள்ள வேட்கையாலும், குறிப்பாக தனது நல்குணத்தாலும் பலரது மனங்களைக் கொள்ளைகொண்ட திரு ஆனந்த கண்ணனின் மறைவுக்கு உள்ளூர் மற்றும் தமிழகப் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.