புற்றுநோய் சிகிச்சை தொடர்பில் மேம்படுத்தப்பட்ட மெடிஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டம்

2 mins read
19b543b7-3ab1-4cc1-bf85-0d1cce232223
-

புற்றுநோய் நோயாளிகள் அடுத்த ஆண்டுமுதல் தங்களின் வெளிநோயாளி சிகிச்சைக்கான கட்டணத்தில் கூடுதல் உதவி பெறலாம். அவர்களுக்கான மருந்தைப் பொறுத்து, மெடிஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டத்தின்கீழ் மாதம் $200 முதல் $9,600 வரை வழங்கப்படலாம்.

தற்போது இத்தகைய நோயாளிகளுக்கு மாதம் தலா $3,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை அடுத்த ஆண்டுமுதல் மாறவுள்ளது. இத்துடன் அரசாங்க மானியத்திற்கு மேலும் அதிகமான புற்றுநோய் சிகிச்சைகள் தகுதிபெறவுள்ளன. 'மருந்து உதவி நிதி'த் திட்டத்தின்கீழ் விலை அதிகமான மருந்துகள் சிலவற்றுக்கு அரசாங்கம் மானியம் வழங்கவுள்ளது. இதற்காக தனிநபர் மாத வருமானம் $2,800லிருந்து $6,500க்கு உயர்த்தப்படும்.

இம்மாற்றங்களால் மானிய உதவி பெற்றுள்ள புற்றுநோய் நோயாளிகள், அடுத்த செப்டம்பர் மாதம் முதல் தங்களின் வெளிநோயாளி சிகிச்சைக்கான முழு கட்டணத்தைக் காப்புறுதி மற்றும் மெடிசேவ் திட்டம் வழி செலுத்துவர். தற்போது நோயாளிகளில் 70 விழுக்காட்டினருக்கு மட்டுமே இந்த நிலை உள்ளது. புற்றுநோய் தொடர்பான பராமரிப்புக்கு அதிகச் செலவாவது குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்றை மெடிஷீல்டு லைஃப் மன்றம் அமைத்தது.

மெடிஷீல்டு லைஃப் திட்டத்தின்கீழ் கட்டுப்படியாகக்கூடிய விலையில் பலன் தரும் வெளிநோயாளி புற்றுநோய் மருத்துவ சிகிச்சைகள் யாவை என்பதைப் பட்டியலிடுமாறு சுகாதார அமைச்சுக்கும் மன்றம் பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில் 'ஐபி'கள் எனப்படும் ஒருங்கிணைந்த ஷீல்டு காப்புறுதித் திட்டங்களின்கீழ் தனியார் சுகாதாரப் பராமரிப்பு சிகிச்சைக்குச் செல்லும் நோயாளிகள் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்முதல் இப்பட்டியலில் இல்லாத மருந்து தொடர்பில் தொகை கோர இயலாது.

இருப்பினும் இப்புதிய விதிமுறைகள் துணைக் காப்புறுதிகளுக்குப் பொருந்தாது. இத்தகைய துணைக் காப்புறுதிகள், நோயாளியின் மருத்துவச் செலவில் ஒரு பகுதியை அல்லது முழுமையாக கட்டக்கூடியதாகும்.