செப்டம்பர் 10ஆம் தேதி 'எஸ்பிஎச்' சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம்
சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) நிறுவனத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் அடுத்த மாதம் 10ஆம் தேதி மெய்நிகர் முறையில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்போது, ஊடகப் பிரிவை லாப நோக்கமற்ற நிறுவனமாக மாற்றி, தனியாக நடத்துவது என்று எஸ்பிஎச் முன்வைத்துள்ள பரிந்துரை தொடர்பில் பங்குதாரர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படும். எஸ்பிஎச் மறுசீரமைப்பின் முதல் நடவடிக்கையாக இது இடம்பெறும். எஸ்பிஎச் நிறுவனத்தைத் தனியார்மயமாக்கி, அதன் எஞ்சிய தொழில்களை $3.4 பில்லியனுக்கு வாங்க கெப்பல் குழுமம் விருப்பம் தெரிவித்து உள்ளது. ஊடகப் பிரிவு மறுசீரமைப்பிற்குப் பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெற்ற பிறகே எஸ்பிஎச் நிறுவனம், கெப்பல் குழுமத்திடம் கைமாறும் நடவடிக்கை இடம்பெறும். ஊடகப் பிரிவை பொறுப்புறுதி நிறுவனமாக மாற்றும் நடவடிக்கை இடம்பெற, வாக்கெடுப்பில் பங்கேற்கும் பங்குதாரர்களில் குறைந்தது 50 விழுக்காட்டினர் அதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலையிடத்தில் பாகுபாடு, பாலியல் தொல்லை: நிறுவனத்திடம் விசாரணை
வேலையிடத்தில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெறுவதாகவும் எழுந்த புகார்களைத் தொடர்ந்து, 'உபிசாஃப்ட் சிங்கப்பூர்' நிறுவனத்திடம் நியாயமான வேலைவாய்ப்பு நடைமுறைகளுக்கான முத்தரப்புக் கூட்டணி அமைப்பு விசாரித்து வருகிறது. அந்த பிரெஞ்சு காணொளி விளையாட்டு உருவாக்க நிறுவனத்தின் சிங்கப்பூர் அலுவலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வேலையிடத் துன்புறுத்தல், நியாயமின்றி நடத்தப்படும் விதம் குறித்து கடந்த மாதம் 23ஆம் தேதி பெயரேதுமின்றி ஒரு புகார் வந்ததாக முத்தரப்புக் கூட்டணி குறிப்பிட்டது. அந்த நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்பட்ட பாலியல் துன்புறுத்தல், வேலையிடப் பாகுபாடு குறித்து காணொளி விளையாட்டு செய்தித்தளமான 'கோட்டகு' சென்ற மாதம் செய்தி வெளியிட்டிருந்தது. அந்நிறுவனத்தின் 20க்கும் மேற்பட்ட முன்னாள், இந்நாள் ஊழியர்களை நேர்கண்டு அச்செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. உபிசாஃப்ட் சிங்கப்பூர் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 500 பேர் வேலை செய்வதாகவும் அதில் நிபுணத்துவப் பொறுப்புகளில் இருப்போரில் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டினர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் என்றும் கூறப்படுகிறது.

