முதிர்ச்சியடைந்த பேட்டைகளைவிட முதிர்ச்சியடையாத ஹாவ்காங், ஜூரோங் ஈஸ்ட் ஆகியவற்றின் கூடுதல் பரப்பளவைக் கொண்ட தேவைக்கேற்ப கட்டப்படும் வீவக வீடுகளுக்கு அதிக விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன.
ஹவ்காங்கில் உள்ள நான்கறை வீவக வீடுகளுக்குப் பலர் விண்ணப்பித்துள்ளனர்.
முதிர்ச்சியடைாத பேட்டைகளில் கடந்த சில ஆண்டுகளாக இல்லாத அளவில் அங்கு விண்ணப்பங்கள் குவிந்தன.
அந்தப் பகுதியில் 'ஹாவ்காங் சிட்ரீன்' மற்றும் 'கோவன் வெல்ஸ்ப்ரிங்' ஆகிய திட்டங்களில் இருக்கும் 459 நான்கறை வீடுகள் விற்கப்படுகின்றன.
நேற்று மாலை நிலவரப்படி அவற்றை வாங்க 10,602 பேர் விண்ணப்பித்துள்ளனர். அப்படியென்றால் முதன்முறையாக வீடு வாங்க விண்ணப்பிப்போர் 17ல் ஒருவருக்குத்தான் வீடு கிடைக்கும்.
இரண்டாவது முறையாக வீடு வாங்க விண்ணப்பிப்போர் 55 பேரில் ஒருவருக்கு மட்டுமே வீடு கிடைக்கும்.
எனினும், 'ஹாவ்காங் சிட்ரீன்' திட்டத்தின் 102 ஐந்தறை வீடுகளுக்கு வந்த விண்ணப்பங்கள் சற்று குறைவு.
ஜூரோங் ஈஸ்டில் மொத்தம் 240 தேவைக்கேற்ப கட்டப்படும் நான்கறை வீடுகள் விற்கப்படுகின்றன. அவற்றில் ஒவ்வொன்றை வாங்கவும் முதன்முறையாக வீடு வாங்குவோர் 11 பேருக்கும் மேல் விண்ணப்பித்துள்ளனர்.
ஒப்புநோக்க காலாங்/வாம்போ, குவீன்ஸ்டவுன், தெம்பனீஸ் போன்ற முதிர்ச்சியடைந்த பேட்டைகளில் தேவைக்கேற்ப கட்டப்படும் வீவக வீடுகளை வாங்குவதற்கான போட்டி குறைவு.
உதாரணமாக, காலாங்/வாம்போவில் கட்டப்படும் 'டவுனர் ரெசிடன்சஸ்' திட்டத்தில் 226 நான்கறை வீடுகள் விற்கப்படுகின்றன. அவற்றில் ஒவ்வொன்றுக்கும் முதன்முறையாக வீடு வாங்குவோர் ஐந்து பேருக்கு மேல் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
இந்தத் திட்டத்தில் நான்கறை வீடுகள்தான் ஆக அதிக பரப்பளவைக் கொண்டவை.
குவீன்ஸ்டவுனின் 'குவீன்ஸ் ஆர்க்' திட்டத்திலும் 534 நான்கறை வீடுகள் ஒவ்வொன்றுக்கும் கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இத்தனைக்கும் இந்தத் திட்டத்தை முடிக்கத்தான் ஆக அதிக காலம் ஆகும்.
'குவீன்ஸ் ஆர்க்' திட்டம் ஐந்தாண்டுகளில் கட்டிமுடிக்கப்படும்.
தெம்பனீசில் உள்ள 'தெம்பனிஸ் கிரீன்குவார்ட்ஸ்', 'தெம்பனிஸ் கிரீன்ஜேட்' ஆகிய திட்டங்களில் விண்ணப்பங்கள் இன்னும் குறைவாகப் பதிவாயின.
பொதுவாக முதிர்ச்சியடைந்த பேட்டைகளில் வீடு வாங்க வாடிக்கையாளர்கள் விரும்புவர். அந்தப் போக்கு இப்போது மாறியுள்ளது.

