பன்முகக் கலைஞர் ஆனந்த கண்ணன் மறைவு

பன்முகக் கலைஞர் ஆனந்த கண்ணன் மறைவு

4 mins read
19544691-1c75-46aa-9d41-93332ac83bc0
ஆனந்த கண்ணன். படம்: ஏகேடி கிரியேஷன்ஸ் -

நாட­கக் கலை­ஞர், தொலைக்­காட்­சிப் படைப்­பா­ளர், நடி­கர், நாடக இயக்­கு­நர் என பன்­மு­கங்­க­ளைக் கொண்ட உள்­ளூர் கலை­ஞர் கோ. ஆனந்த கண்­ணன் கால­மா­னார். புற்­று­நோ­யால் சிறிது காலம் நோய்­வாய்ப்­பட்­டி­ருந்த அவர் நேற்று முன்தினம் பின்­னி­ரவு இயற்கை எய்­தி­னார். அவ­ருக்கு வயது 48.

தமது பதின்ம வயதிலேயே 'சிறுவர் மேடை' போன்ற வானொலி நாடகங்களையும், 'சிறுவர்கள் நாங்கள்' போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் வழிநடத்தினார்.

இளமை காலத்­தி­லேயே நாட­கக் கலை­யில் அதீத நாட்­டம் கொண்ட திரு ஆனந்த கண்­ணன் சிங்கப்பூரின் ரவீந்­தி­ரன் நாட­கக் குழு­வில் நடித்து பின்பு உள்­ளூர் தொலைக்­காட்சி நாட­கங்­க­ளி­லும் நடித்து பிர­ப­ல­மா­னார். பிறகு திரு ஆனந்­த­ கண்­ணன் தமி­ழ­கத்­தில் வானொ­லி­யில் படைப்­பா­ள­ரா­கப் பணி­யாற்­றும் வாய்ப்­பைப் பெற்­றார். அதன் பின்­னர் 2000த்தைத் தொடர்ந்த ஆண்டுகளில் அங்கு 'சன் மியூ­சிக்' எனும் தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­யில் படைப்­பா­ளராகி உல­கத் தமிழ் மக்­க­ளி­டையே பிரப­ல­மா­னார்.

1988ல் ரவீந்­தி­ரன் எழு­திய 'குடும்­பத்­தின் அறை­கள்' என்ற மேடை நாட­கத்­தில் முதன் முறை­யாக முக்­கிய காதா­பாத்­தி­ரத்­தில் நடித்து பல­ரின் கவ­னத்தை ஈர்த்­தார்.

1990ல் நடந்த இந்­திய கலா­சார மாதத்­திற்­கான சிறந்த நடி­கர் விருதை பெற்ற அவர், விரு­திற்­காக கிடைத்த பரிசுத் தொகையை, மேலும் அதி­க­மான தமிழ் நாட­கங்­களைத் தயா­ரிக்க பயன்­ப­டுத்­தி­னார்.

புத்­தாக்க சிந்­தனை நிறைந்த தனது படைப்­பு­க­ளின் வழி பல­ரின் சிந்­த­னை­க­ளைத் தூண்­டும் திறன் அவ­ரி­டம் இருந்­த­தாக கூறி­னார் திரு வடி­வ­ழ­கன். "காண்­போம் கற்­போம்!" என்ற தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­யில் இரு­வ­ரும் முதன் முறை­யாக சேர்ந்து படைத்த அனுபவங்­களை நினை­வு­கூர்ந்த திரு வடி­வ­ழ­கன், இறு­தி­யாக 2019ஆம் ஆண்டு திரு ஆனந்த கண்­ண­னின் 'கர­கம்' என்­னும் பாரம்­ப­ரிய மேடை நடன, நாடக நிகழ்ச்­சி­யில் அவ­ரு­டன் சேர்ந்து பணி­யாற்­றி­னார்.

"அவனை நான் 'தமிழ் எழுச்சி கலை­ஞன்' என்று அழைப்­பேன். சிங்­கப்­பூ­ரில் தமிழ் சார்ந்த எழுச்சியை ஊட்­டி­யி­ருக்­கி­றான். கலை­களை முறை­யாக கற்­றுக்­கொண்டு, முறை­யா­கக் கற்­றுக்­கொடுக்­கி­றான். இந்த இழப்பு சிங்­கப்­பூர் இந்­திய கலைத் துறைக்கு ஒரு பேரி­ழப்பு," என்­றார் திரு வடி­வ­ழ­கன். பிறகு தமிழ்­நாட்­டின் சன் டிவி­யில் சிந்­து­பாத் என்ற குழந்­தை­களைக் கவ­ரும் நாட­கத்­தில் நடித்தார் ஆனந்த கண்­ணன். அதன் மூலம் பல சிறார்­க­ளை­யும் அவர் அதி­க­மா­கக் கவர்ந்­தார். 'இத்­தனை நாளாய் எங்­கி­ருந்­தாய்', 'அதி­சய உல­கம் 3D' போன்ற சில திரைப்­ப­டங்­க­ளி­லும் அவர் நடித்­துள்­ளார்.

மாலை மதுரம், காண்போம் கற்போம், அமளி துமளி, ஊர்க்குருவி, சூப்பர்ஸ்டார் சேலஞ்ச், சவால் சிங்கப்பூர், சுவை போன்ற பல உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திரு ஆனந்த கண்ணன் படைத்த, நடித்தவை. சிங்கப்பூரில் 2018ஆம் ஆண்டின் பிரதான விழாவில் அவர் தொகுத்து வழங்கிய 'ஊர்க்குருவி' நிகழ்ச்சிக்காக சிறந்த படைப்பாளர் விருதையும் பெற்றார்.

மர­புக்­க­லை­களை வளர்க்­கும் கலை­ஞ­ராக, குறிப்­பாக சிங்­கப்­பூ­ரில் வில்­லுப்­பாட்டு, பொய்க்­கால் குதிரை, மயி­லாட்­டம் போன்ற பாரம்­ப­ரிய கிரா­மிய கலை­களை வளர்ப்­ப­தில் அதிக கவ­னம் செலுத்தி­வந்­தார் திரு ஆனந்த கண்­ணன். கூத்துப்பட்டறை ந. முத்துசாமி அவர்களின் மாணவரான இவர், தேசியக் கலைகள் மன்றத்தின் ஆதரவில் இந்தியாவுக்குச் சென்று மரபுக்கலை பயின்றவர். பல மேடை நாடகங்களை எழுதியும் இயக்கியும் உள்ளார்.

அவர் நிறு­விய ஏகே தியேட்டர் (AK Theatre) நாட­கக் குழு­வின் மூலம், நாட­கக் கலை­யை­யும் தமிழ் மொழி­யை­யும் மாண­வர்­க­ளி­டம் எளி­மை­யான முறை­யில் கொண்டு சேர்க்க பல முயற்­சி­களை மேற்கொண்­டார்.

ஏகே தியேட்­டர் நாட­கக் குழு­வில் மனைவி நாக­ராணி, மகள் அவா கண்­ணன், நண்­பர் ராஜேஷ் கண்­ணன் ஆகி­யோ­ரு­டன் இணைந்து மர­பு­வழி கலை­களை முறை­யாக கற்று பாரம்­ப­ரிய தமிழ் கலை­க­ளின் பெரு­மை­யைப் பறை­சாற்­றி­ய­வர்.

"நான்கு வரு­டங்­க­ளா­கத்­தான் எனக்கு அவரை தெரி­யும். 'சீவ­கன்' என்­னும் ஒரு நாட­கத்­தின் மூலம் அவ­ருக்கு அறி­மு­க­மா­னேன். அதி­லி­ருந்து ஓர் இளை­ஞ­னாக எனக்கு நிறைய வாய்ப்­பு­களை வழங்­கி­யுள்­ளார். அவர் இளை­ஞர்­கள் மீது அதீத நம்­பிக்­கை­யும் அன்பும் கொண்­டி­ருந்­தார். எங்களுடன் தமிழ் மொழியைப் பற்றி­யும் தமிழ் கலை­க­ளின் எதிர்­கா­லத்தைப் பற்­றி­யும் நிறைய பேசு­வார். முக்­கி­ய­மாக இளை­ஞர்­க­ளி­டையே மரபுக் கலை­களை எவ்­வாறு கொண்­டு­சேர்க்­க­லாம் என்­பதை சிந்­தித்­திக்­கொண்டே இருப்­பார். நேர்­மறை சிந்­த­னை­யா­ளர். எல்­லோ­ருக்­கும் ஊக்­கம் கொடுத்து, அவர் இருக்­கும் இட­மெல்­லாம் கல­க­ல­வென்று இருக்­கும்­படி செய்­வார்." என்­றார் ஏகே தியேட்­ட­ரில் உறுப்­பி­ன­ராக இருக்­கும் சுப்பு அடைக்கலவன். திரு ஆனந்த கண்­ணன் நிர்­வா­கத்­தில், 'ஆனந்த கூத்து' என்று அழைக்­கப்­படும் இந்­திய பாரம்­ப­ரிய கலை­களில் பட்­டை­யக்­கல்வி சான்­றி­தழ் பெரும் கல்வி திட்­ட­மும் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. இது சிங்­கப்­பூர் தமிழ் மொழி மற்­றும் கலாசார வளர்ச்­சி­யில் முக்­கிய அங்­கத்தை வகிக்­கும் என்­றார் திரு வடி­வ­ழ­கன்.

30 ஆண்­டு­க­ளுக்கு மேல் தமிழ்க் கலை உல­கில் தமது நடிப்பு, படைப்­பாற்­றல் திறன்­க­ளா­லும் தமிழ் மொழி, தமிழ் மர­புக்­கலை மீதுள்ள வேட்­கை­யா­லும் பல­ரது மனங்­களைக் கொள்ளை கொண்ட திரு ஆனந்த கண்­ண­னின் மறை­வுக்கு உள்­ளூர் மற்­றும் தமி­ழ­கப் பிர­ப­லங்­கள் சமூக வலைத்­த­ளங்­களில் இரங்­கல் தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

இந்து இளங்கோவன்