செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
5e19755d-91f2-4b6f-ba84-e62bde1a5e64
-

பங்குதாரர்களை அடக்கிய முஸ்தஃபா உரிமையாளர்கள்

'முஸ்தஃபா சென்டர்' கடைத்தொகுதியின் உரிமையாளர் திரு முஸ்தாக் அகமது, இரண்டு வழக்குகளில் சிறுபான்மை பங்குதாரர்களை அடக்கியதாக உயர் நிதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஒரு வழக்கை அவரது உடன் பிறவா சகோதரர்கள் தொடுத்தனர். மற்றொன்றை அவரது வர்த்தகப் பங்காளியின் மகன்கள் தொடுத்தனர்.

இரண்டு வழக்குகளும் 'முகமது முஸ்தஃபா சம்சுதீன் & கோ நிறுவனத்துடன் தொடர்புடையவை. அது, 'முஸ்தஃபா சென்டர்' கடைத்தொகுதிக்கு அடித்தளம் அமைத்த நிறுவனம்.

முகமது முஸ்தஃபா சம்சுதீன் & கோ நிறுவனத்தில் தான் மட்டும்தான் பங்குதாரர் எனத் திரு முஸ்தாக் வாதிட்டார். தீர்ப்பு அவருக்குச் சாதகமாக அமையவில்லை.

திரு முஸ்தாக்கும் அவரது மனைவியும் வழக்கு தொடுத்தவர்களுக்குச் சொந்தமான பங்குகளை வாங்கவேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

பங்குகளின் விலை சுதந்திரமான மதிப்பீட்டாளர்களால் நிர்ணயிக்கப்படும்.

வீட்டில் தங்கியிருக்க கட்டாய உத்தரவை மீறியதற்கு சிறை

வீட்டில் தங்கியிருக்கும் கட்டாய உத்தரவை மீறி, தாங்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் ஒரே அறையில் நேரம் செலவிட்ட இருவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

37 வயது பொஜாங்கி சுரேஷ் நாயுடு, 48 வயது பாரதி துல்ஷிராம் செளத்ரி இருவருக்கும் மூன்று வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தங்களிடமிருந்து கொவிட்-19 கிருமி பரவும் சாத்தியம் இருந்தபோது பிறருக்குக் கிருமித்தொற்றை ஏற்படுத்தும் அபாயத்தை விளைவித்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இருவரும் ஒப்புக்கொண்டனர்.

சுரேஷுக்குத் தீர்ப்பளிக்கும்போது முகக்கவசம் அணியாமல் இருந்த ஒரு குற்றச்சாட்டும் கருத்தில்கொள்ளப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதியன்று இருவரும் ஒரே விமானத்தில் இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்தனர். இருவரும் இந்தியாவிலிருந்து வந்த சிங்கப்பூர் நிரந்தரவாசிகள்.