அலுவலகத்திற்கு இன்றுமுதல் கூடுதல் ஊழியர்கள் திரும்ப அனுமதி
இன்றுமுதல் கட்டுப்பாடுகளைத் தளர்த்துகிறது சிங்கப்பூர். மேலும் அதிகமான ஊழியர்கள் அலுவலகத்திற்குத் திரும்ப, நிறுவனங்களுக்கு அரசாங்கம் பச்சைக் கொடி காட்டியுள்ளது. இருப்பினும், கொள்ளைநோய்க்குப் பிந்திய உலகத்தின் ஒரு நிரந்தர அம்சமாக கலப்புமுறை வேலை ஏற்பாடு இருக்கும் எனப் பெரும்பாலான நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.
சிங்கப்பூரில் ஆகப் பெரிய அளவில் இயங்கும் நிறுவனமான அரசாங்கமும் இதற்கு விதிவிலக்கல்ல.
"கொவிட்-19க்குப் பின் உருவாகும் புதிய வழக்கநிலைக்கு ஏற்ப, வேலையில் கூடுதல் நீக்குப்போக்குத் தன்மையை ஆதரிக்கும் நிலையை நோக்கி பொதுச் சேவை செயல்பட்டு வருகிறது," என்றார் பொதுச் சேவைத் துறையின் பேச்சாளர் ஒருவர்.
"பொதுச் சேவை அதிகாரிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதேவேளையில் அமைப்பின் தேவைகளும் அதற்கு நிகராகப் பூர்த்தியாக வேண்டும்," என்றார்.
கொள்ளைநோய்க்கு எதிராகச் செயல்படும் அமைச்சுகள்நிலைப் பணிக்குழு இரண்டு வாரங்களுக்குமுன் அறிவித்திருந்தபடி இன்றுமுதல், ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறு வேலை செய்வது இயல்புநிலையாக இருக்காது.
அதற்குப் பதிலாக, தனித்து வேலை செய்துவந்த ஊழியர்களில் 50 விழுக்காட்டினர் மீண்டும் அலுவலகத்திற்குத் திரும்ப அனுமதிக்கப்படுவர். இந்தச் சூழல் கடைசியாக இவ்வாண்டு மே மாதம் 8ஆம் தேதிக்கு முன் நிலவியது.
சிங்கப்பூரில் கொவிட்-19 கண்டறியப்பட்டது முதல் மிகுந்த சிரமங்களுடன் கலப்புமுறை வேலை ஏற்பாட்டை நிறுவனங்கள் சாத்தியமாக்க முயன்றன. இத்தகைய ஏற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், பெரும்பாலான நிறுனங்களுக்கும் அவற்றின் ஊழியர்களுக்கும் அது பரிச்சயமாகிவிட்டது.
வீட்டில் வேலை செய்வதற்குக் குறிப்பிட்ட சில நாட்களை ஒதுக்குவது, வேலை தொடங்கும் நேரத்தில் நீக்குப்போக்குத்தன்மை அனுமதிப்பது போன்ற அம்சங்களில் நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன. இதற்கிடையே, ஊழியர்களிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக அவர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைப்பதாகச் சில முதலாளிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இடத்தையும் வேலை செய்யும் பாணியையும் அதற்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும் என்றார் 'ரேன்ட்ஸ்டேட் சிங்கப்பூர்' ஆள்சேர்ப்பு நிறுவனத்தின் சிங்கப்பூர், மலேசிய நாடுகளுக்கான நிர்வாக இயக்குநர் திருவாட்டி ஜெயா தாஸ்.

