செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
bd014c57-8d97-4f47-92e4-add7dca80c2a
-
Google News Preferred Icon

சமூகத்தில் 49 பேருக்கு கொவிட்-19

சமூகத்தில் நேற்று புதிதாக 49 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவர்களில் முன்னதாக கிருமியால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்து தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டோர் 23 பேர். தனிமை உத்தரவின்கீழ் இல்லாத எழுவரைச் சோதித்த போது அவர்களிடம் கிருமித்தொற்று கண்டறியப்பட்டது. எஞ்சிய 19 சம்பவங்களும் தொடர்பு அறியப்படாத நிலையில் உள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர் ஒருவரும் சமூகத்தொற்றுச் சம்பவங்களில் அடங்குவார். தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அவர், கடுமையான நோய் பாதிப்புக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. மேலும், வெளிநாட்டிலிருந்து வந்த நால்வருக்கும் கொவிட்-19 தொற்று இருப்பது உறுதியானது. சிங்கப்பூரில் இதுவரை 66,334 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

முழுமையாகத் தடுப்பூசி

போட்டுக்கொண்டவர் மரணம்

கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக்கொண்ட 90 வயது முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். நாள்பட்ட சிறுநீரக நோய், உயர் ரத்த அழுத்தம் இருந்ததாகவும் கொவிட்-19 கிருமியால் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவும் அவர் இறந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. கடந்த மாதம் 29ஆம் தேதியன்று கொவிட்-19 தொற்றுக்கான அறிகுறிகள் முதியவருக்கு ஏற்பட்டன. ஆகஸ்ட் 1ஆம் தேதியன்று சமூகக் கண்காணிப்புப் பரிசோதனைப் பணிகளின்போது அவருக்குத் தொற்று இருப்பது உறுதியானது. மறுநாள் மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக்கொண்ட பிறகும் கொவிட்-19 தொடர்பில் ஏற்பட்ட சிக்கலால் சிங்கப்பூரில் நேர்ந்த முதல் உயிரிழப்பு இது. இதுவரை 45 பேர் கொவிட்-19 தொற்றால் ஏற்பட்ட சிக்கல் காரணமாக உயிரிழந்துவிட்டனர்.