கொவிட்-19 தொற்று காரணத்தால் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மாணவர்கள், பள்ளிப் பணியாளர்கள் ஆகியோர் கட்டாய விடுப்பில் வைக்கப்படுவது வழக்கம். இன்றுமுதல் இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டவருக்கு கொரோனா கிருமி இல்லை என்பது பரிசோதனைவழி உறுதிசெய்யப்பட்டால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பள்ளி திரும்பலாம்.
இதுவரை, கட்டாய விடுப்பு காலம் முடியும்வரை மாணவர்கள், பள்ளிப் பணியாளர்கள் வீட்டிலேயே இருக்கவேண்டும். சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படுவதால் இந்தக் கட்டாய விடுப்பு காலம் நபருக்கு நபர் மாறுபடும். உதாரணத்திற்கு தனிமை உத்தரவில் வைக்கப்படும் குடும்ப உறுப்பினரால், அவருடன் தொடர்பில் இருந்த ஒரு மாணவர் அல்லது பள்ளிப் பணியாளர் அந்த தனிமை உத்தரவு முடியும்வரை பள்ளி செல்லக்கூடாது.
மேலும், சுகாதார அபாயம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பள்ளிக்குப் போகக்கூடாது என்ற நடைமுறையும் இனி மாற்றம் காண்கிறது. கொவிட்-19 தொற்று இல்லை என்பதை அவர்கள் உறுதிசெய்துவிட்டால் பள்ளி திரும்பலாம்.
இம்மாற்றங்கள் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தொடக்கக்கல்லூரி, மில்லெனியா கல்விக் கழகம் ஆகியவற்றில் உள்ள மாணவர்களையும் பள்ளிப் பணியாளர்களையும் பாதிக்கும் என்று பெற்றோர்களுக்குக் கல்வி அமைச்சு நேற்று அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருந்தது.
சமூகப் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளை சிங்கப்பூர் படிப்படியாகத் தளர்த்துவதற்கு ஏற்ப இம்மாற்றத்தைக் கல்வி அமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ளது.
கல்வி அமைச்சின் கடிதத்தின்படி, இரு நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை நிறைவேற்றினால் கட்டாய விடுப்பில் உள்ளவர்கள் பள்ளி திரும்பலாம் என்று குறிப்பிடப்பட்டது.
தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்ட நபர், ஓர் அரசாங்கப் பரிசோதனை வளாகத்திற்குச் சென்று கொவிட்-19 தொடர்பான பரிசோதனையைச் செய்துகொண்டு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்த வேண்டும். அல்லது தனிமை உத்தரவில் வைக்கப்பட்ட மாணவரோ பள்ளிப் பணியாளரோ கொவிட்-19 தமக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
சுகாதார அமைச்சு குறுந்தகவல்வழி அனுப்பும் சுகாதார அபாய எச்சரிக்கை தொடர்பில் அமைச்சு விளக்கம் அளித்திருந்தது. கொவிட்-19 தொற்று தங்களுக்கு இல்லை என்பதைப் பரிசோதனை வழி அவர்கள் உறுதிசெய்தால் அவர்களுக்குத் தரப்பட்ட விடுப்பு முடியும்வரை காத்திருக்காமல் உடனே பள்ளி திரும்பலாம்.
இருப்பினும், சளிக்காய்ச்சல் அறிகுறிகள் உள்ள நிலை, அல்லது வீட்டில் உள்ளவர்களுக்குச் சளிக்காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது போன்ற சூழல்களில் கட்டாய விடுப்பில் இருக்க வேண்டிய கொள்கையில் மாற்றம் ஏதுமில்லை என்று அமைச்சு தெரிவித்தது.
சளிக்காய்ச்சல் அறிகுறிகள் ஒருவருக்கு இருந்தால் அவர் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு விடுப்பில் செல்ல வேண்டும்.
வீட்டில் உள்ளவருக்குச் சளிக்காய்ச்சல் இருந்தால் கொவிட்-19 இல்லை என்று பரிசோதனை உறுதிசெய்யும்வரை, மற்றவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.

