சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), ஸ்கூட், ஜெட்ஸ்டார் ஏஷியா ஆகிய உள்ளூர் விமான நிறுவனங்கள் மூன்றும் தங்களின் முன்களப் பணியாளர்களிடையே தடுப்பூசியைக் கட்டாயமாக்குகின்றன.
விமானிகள், விமானச் சிப்பந்திகள் ஆகியோர் செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் நேற்று தெரிவித்தது.
டிசம்பர் 1ஆம் தேதிக்குள் தன் முன்களப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கவேண்டும் என்று ஸ்கூட் நிறுவனம் தெரிவித்தது.
விமானிகள், சிப்பந்திகளில் 99 விழுக்காட்டினரும் சிங்கப்பூரில் பணியாற்றும் முன்களப் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக குழுமம் கூறியது.
இதற்கிடைய, ஜெட்ஸ்டார் ஏஷியா, தன் ஊழியர்கள் அனைவரும் அக்டோபர் 1ஆம் தேதிக்குள் கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக்கொண்டிருப்பதைக் கட்டாயமாக்கியுள்ளது.
அரசாங்கம் கடந்த மாதம் இரண்டாம் தேதியன்று வெளியிட்ட ஆலோசனை அறிக்கையின்படி, உயர் கிருமி அபாயம் உள்ள சூழலில் வேலை செய்வோருக்கு முதலாளிகள் தடுப்பூசியைக் கட்டாயமாக்கலாம் என்று குறிப்பிடப்பட்டது.
இதையடுத்து, கொவிட்-19க்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கும் முதல் சிங்கப்பூர் விமான நிறுவனம் ஜெட்ஸ்டார் ஏஷியா ஆகும்.
இந்நிலையில், அதன் ஊழியர்களில் கிட்டத்தட்ட 100 விழுக்காட்டினர் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்தது.

