கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக்கொண்ட 90 வயது முதியவர், கொவிட்-19 சிக்கல் காரணத்தால் உயிரிழந்துவிட்டார். அவருக்கு மற்ற சுகாதாரப் பிரச்சினைகளும் முன்பு இருந்திருக்கின்றன.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலர், தீவிர சிகிச்சைப் பிரிவிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தடுப்பூசி போட்டு என்ன பயன் என்ற கேள்வியைச் சிலர் முணுமுணுக்கத் தொடங்கிஉள்ளனர்.
தேசிய தொற்றுநோய்கள் நிலையத்தில் மூத்த ஆலோசகராக உள்ள இணைப் பேராசிரியர் லிம் போ லியன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
கொவிட்-19 ஏற்பட்டு உயிரிழக்கும் சாத்தியம், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்குக் குறைவு என்று அண்மையத் தரவுகள் தெரிவித்துள்ளன. அத்துடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிர்வாயு தேவைப்படும் நிலையும் அவர்களுக்கு ஏற்படும் சாத்தியம் குறைவே. தொற்று ஏற்படும் சாத்தியமும் குறைவு, அது ஏற்பட்டாலும் குணமடையும் காலம் குறைவு என்று அவர் குறிப்பிட்டார்.
தடுப்பூசி பலனளிக்கும் விகிதம் 90% என்று கூறும்போது, 100 பேரில் 10 பேருக்குத் தொற்று ஏற்படும் சாத்தியம் உண்டு என்று கொள்ளப்படலாம். அதனால், தடுப்பூசியின் பலனை இவ்வாறுதான் நாம் அளவிட வேண்டும்.
இதற்கிடையே உருமாறிய டெல்டா கிருமியும் தற்போதைய தடுப்பூசிகள் அளிக்கும் பாதுகாப்பைக் குறைக்கும் வண்ணம் ஆற்றல்கொண்டதாக உள்ளது.
உறுதியற்ற நிலையை உருவாக்கிவிட்ட கொள்ளைநோய்ச் சூழலில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் தொற்றுக்கு ஆளாவதும் பலியாவதும் நடக்கக்கூடியதே.
இதற்கிடையே, கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசி தொடர்பில் மேலும் பல சாதனைகள் நடக்கலாம், நடக்கும். இருப்பினும், தடுப்பூசிக்குப் பின்னர் தொற்று ஏற்பட்டாலும் அதன் கடுமை குறைவாகத்தான் இருக்கும் என்று கூறலாம்.
மருத்துவத் துறையில் கொள்ளைநோயை முறியடிக்க உதவும் மிக அற்புதமான சாதனை, கொவிட்-19க்கு எதிராக உருவாக்கப்பட்ட இந்தத் தடுப்பூசிகள். உருக்குலைய வைக்கும் இந்த கொரோனா கிருமியின் சீற்றத்தைச் சற்று தணிக்க உதவுகின்றன தடுப்பூசிகள். கிட்டத்தட்ட 19 விழுக்காட்டினர் இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் உள்ளனர்.

