சிங்கப்பூரில் தற்போது குறைந்தது 80 தடுப்பூசி நிலைய நிர்வாகிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசிகளைப் போடும் ஒட்டுமொத்த செயல்பாடுகளுக்கு இந்த நிர்வாகிகள் பொறுப்பு வகிக்கின்றனர்.
இவர்களில் பலர், சுகாதாரப் பராமரிப்புத் துறை அல்லாத வேறு துறைகளில் முன் அனுபவம் உள்ளவர்கள்.
சில்லறை வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறைகளில் மேற்பார்வையாளர்கள், நிகழ்ச்சிகள் மற்றும் திட்ட நிர்வாகிகள், விமானிகள் மற்றும் விமானச் சிப்பந்திகள் போன்ற பலதரப்பட்ட பின்னணிகளை உடையவர்கள் இவர்கள்.
இதற்கிடையே, குறைந்தது $3,500 சம்பளம் பெறும் இந்த நிர்வாகிகள், அனுபவம் அடிப்படையில் மேலும் அதிகமான வருமானத்தை ஈட்டுவதும் உண்டு.
ஓர் ஆண்டு ஒப்பந்தத்தில் நிர்வாகப் பணியில் இணைந்த இக்குறிப்பிட்ட பிரிவினர், ஒப்பந்த காலம் முடிந்ததும் அதே சுகாதாரப் பராமரிப்பு நிறுவனங்களுடன் நிரந்தரமாகப் பணியாற்றும் வாய்ப்பையும் உறுதிப்படுத்திக் கொண்டதாகச் சிலர் கூறுகின்றனர்.
நிர்வாகிப் பொறுப்பை ஏற்பதற்குமுன், இப்பணிக்காக அடையாளம் காணப்பட்டவர்கள் வெவ்வேறு அம்சங்கள் அடங்கிய இரு வாரப் பயிற்சிக்குச் செல்ல வேண்டும்.

