கொவிட்-19 கிருமித்தொற்றால் இலேசாக பாதிக்கப்படுபவர்கள் ஆகஸ்ட் 30ஆம் தேதியிலிருந்து வீட்டிலேயே குணமடைய வழி
வகுக்கும் இல்லத் தனிமை முன்னோடித் திட்டத்தை சிங்கப்பூர் தொடங்கவிருக்கிறது.
நோயுடன் வாழும் நிலைக்கு படிப்படியாக மாறுவதன் ஒரு பகுதியாக இந்த முயற்சி எடுக்கப்
படுகிறது. குறைந்த வீரியத்திலான கிருமித்தொற்று உள்ளோரும் தொற்று கண்டதற்கான அறிகுறி தென்படாதவர்களும் வீட்டிலேயே தனிமை உத்தரவை நிறைவேற்றும் திட்டத்திற்குத் தகுதிபெறுவர் என சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
எனினும், அத்தகைய நோயாளிகளும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கடுமையான நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, வீட்டில் அனைவரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
கர்ப்பிணிகள், மூத்தோர், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ளோர் ஆகிய எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய பிரிவுகளைச் சேராதவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கு ஏற்பவும் இதர முன்னேறிய நாடுகளின் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்பவும் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியது.
இதுகுறித்து நேற்று மாலை மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுகாதார அமைச்சர் ஓங் யி காங், கொவிட்-19 நோயுடன் சேர்ந்து வாழப் பழகிக்கொள்ள சிங்கப்பூர் முன்னெடுக்கும் பயணத்தில் இத்திட்டம் முக்கிய படி என்று வர்ணித்தார்.
கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைய தற்போது இரு வகையான இடங்கள் பயன்படுத்தப்படு கின்றன. மருத்துவமனை மற்றும் சமூகப் பராமரிப்பு வசிப்பிடங்கள் ஆகியன அவை. புதிய முன்னோடித் திட்டம் மூலம் இந்த எண்ணிக்கை மூன்றாக அதிகரிக்கும்.
இலேசான தொற்று கண்டவர்கள் வீட்டிலேயே தங்கி இருந்து குணமடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடும்போது மருத்துவமனை படுக்கைகளும் இதர மருத்துவ வளங்களும் மிச்சப்படும் என்று சுகாதார திரு ஓங் குறிப்பிட்டார்.
இலேசான தொற்று உள்ளோர் வீட்டிலேயே தங்கி குணமடையலாம்

