கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான பாதுகாப்பை அதிகமானோருக்கு வழங்கும் நோக்கில் ஊழியர்களுக்கான தடுப்பூசி வழிகாட்டி நெறிமுறைகள் மறுஆய்வு செய்யப்படுவதாக மனிதவள அமைச்சு தெரிவித்து உள்ளது.
கிருமிப் பரவல் மிகுந்த சூழலில், தங்களது ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை முதலாளிகள் கட்டாயமாக்கலாம் என கடந்த மாதம் அமைச்சு வெளியிட்ட ஆலோசனைக் குறிப்பு தற்போது மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளிடம் அமைச்சு தெரிவித்தது.
இறுதி செய்யப்பட்ட ஆலோசனைக் குறிப்பு விரைவில் வெளியிடப்படும் என அமைச்சு நேற்று தெரிவித்தது.
கொவிட்-19 விவகாரத்தைக் கையாளும் அமைச்சுகள்நிலை பணிக்குழு, தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் 'தடுப்பூசி அல்லது அவ்வப்போது பரிசோதனை' என்னும் அம்சம் தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.
வேலையிடங்கள் பாதுகாப்பானவையாக இருப்பதை உறுதி செய்ய தடுப்பூசி போடுவதை அதிகரிக்கும் நோக்கில் முத்தரப்புப் பங்காளிகள் இந்த அறிவிப்பை மறுஆய்வு செய்துவ வருவதாக அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 1ஆம் தேதிக்குள் தனது ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என மலிவுக்கட்டண விமான நிறுவனமான 'ஜெட்ஸ்டார் ஏஷியா' வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து அமைச்சு இந்த விவரங்களைக் கூறியுள்ளது.
ஜூலை 2ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு இணங்க, ஊழியர்கள் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வதை முதலாளிகள் கட்டாயமாக்கக் கூடாது என மனிதவள அமைச்சு, தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் போன்ற முத்தரப்புப் பங்காளிகள் தெரிவித்திருந்தனர். தேசிய தடுப்பூசிக் கொள்கையும் இவ்வாறே வலியுறுத்து கிறது.
அதேநேரம், கொவிட்-19 தொற்றுக்கான அபாயம் அதிகமுள்ள வேலையிடங்களில் புதிதாக வேலைக்குச் சேருவோர் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என முதலாளிகள் கோரலாம். அல்லது புதிய வேலை நியமனங்களுக்கான விளம் பரங்களில் தடுப்பூசியையும் ஒரு நிபந்தனையாக அவர்கள் விதிக்கலாம்.
குறிப்பாக, தற்போது பணியில் இருக்கும் ஊழியர் எவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பவில்லை என்ற காரணத்திற்காக வேலையிலிருந்து நீக்கக்கூடாது.
இந்தச் சூழலில் 'தடுப்பூசி அல்லது அவ்வப்போது பரிசோதனை' என்னும் அம்சத்தை சுகாதார அமைச்சு ஆகஸ்ட் 6ஆம் தேதி அறிவித்தது.
தேர்ந்தெடுக்கப்பட்ட துறைளைச் சேர்ந்த முன்களப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் அல்லது இரு வாரத்திற்கு ஒரு முறை ஆன்டிஜென் விரைவு பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது அந்த அம்சம்.
சுகாதாரப் பராமரிப்பு, உணவு மற்றும் பானம், பொதுச் சேவை, டாக்சி, தனியார் வாடகை கார், விநியோகம் போன்ற துறைகள் இந்த வரையறைக்குள் வருகின்றன.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, சிங்கப்பூர் மக்கள்தொகையில் 77 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அதேநேரம் ஒரு தடுப்பூசி மட்டும் போட்டுக்கொண்டோரின் விகிதம் 82 ஆகியுள்ளது.

