செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
4176bad2-30d7-4051-9128-6feca8c3d841
-

கிரேஸ் ஃபூ: பசுமைமயத்தில் கணக்காளர்களுக்கு முக்கிய பங்கு

பருவநிலை மாற்றம் தொடர்பான அபாயங்களைத் தணிக்க கணக்காளர்கள் தங்கள் நிறுவனங்களுக்கு உதவ முடியும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறியுள்ளார். வர்த்தகத்தில் நிபுணத்துவக் கணக்காளர்கள் எனும் இணையவழி மாநாட்டில் அவர் நேற்று பேசினார்.

"மூலதனத்தை நிர்வகித்தல், நிறுவன அறிக்கையைத் தயாரித்தல் ஆகியவற்றின் பொறுப்பாளர்களாக இருப்பதால், கணக்காளர்கள் நிறுவனங்களின் நீடித்த நிலைத்தன்மை நடைமுறைகளை விரைவுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்," என்று திருவாட்டி ஃபூ குறிப்பிட்டார்.

சுற்றுப்புறம் சார்ந்த மதிப்பீட்டு அளவுகோல்களைக் கூடுதல் நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டு வருவதால் நீடித்த நிலைத்தன்மை அறிக்கைகளைச் சரிபார்க்கும் திறன்களைக் கணக்காளர்கள் பெறவேண்டும் என்று அவர் கூறினார்.

சிங்கப்பூர் பங்குச்சந்தை நீடித்த நிலைத்தன்மை அறிக்கைக்கான நடைமுறையை 2016ல் அறிமுகப்படுத்தியது. அத்தகைய ஆய்வறிக்கைகளின் தரத்தில் கடந்த சில ஆண்டுகளாக முன்னேற்றம் தெரிகிறது என்றார் அவர்.

இஸ்தானா ஆகஸ்ட் 28ஆம் தேதி பொதுமக்களுக்கு திறந்துவிடப்படும்

வரும் 28ஆம் தேதி இஸ்தானா பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும். ஆனால் வளாகத்தின் பூங்காக்கள்,

மற்ற வெளிப்புற இடங்களில் மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். கட்டடங்கள், உட்புறங்கள் ஆகியவற்றுக்குள் செல்ல அவர்களுக்கு அனுமதி இல்லை.

ஏற்கெனவே நுழைவுச்சீட்டுகள் பெற்றவர்கள்தான் இஸ்தானா வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிபர் அலுவலகம் நேற்று விடுத்த அறிக்கை தெரிவித்தது.

பொது இடங்களில் கடைப்பிடிக்கப்படுவதைவிட கூடுதலான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிக்கை கூறியது. பொதுமக்கள் தங்கள் முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும். உடற்பயிற்சி, உண்ணுதல், நீர் அருந்துதல் போன்ற, முகக்கவசங்களைக் கழற்ற வேண்டிய செயல்கள் அனுமதிக்கப்பட்டாது. அத்துடன் படைப்புநிகழ்ச்சிகளும் நடைபெறாது என்று அதிபர் அலுவலகம் கூறியது.

தேசிய தின அணிவகுப்பை முன்னிட்டு நாளை சில சாலைகள் மூடப்படும்

நாளை 21ஆம் தேதி மரினா பே மிதக்கும் மேடையில் இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்பு நடைபெறவுள்ளதை முன்னிட்டு அந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள சில சாலைகள் காலை 11 மணி முதல் இரவு 11.59 மணி வரை மூடப்படும்.

பேஃபிரண்ட் அவென்யூ, தெமாசெக் அவென்யூ, ராஃபிள்ஸ் லிங்க், ரிப்பபிளிக் பொலிவார்ட், ரிப்பபிளிக் அவென்யூ, ராஃபிள்ஸ் அவென்யூ ஆகியவற்றின் சில சாலைத்தடங்களும் பகுதிகளும் வாகனப் போக்குவரத்துக்கு மூடப்படும் என்று போக்குவரத்து போலிசார் நேற்று கூறினர்.