மருத்துவ ரீதியாக அவசியம் என்று கருதப்படும் விலையுயர்ந்த மருந்துகள் தொடர்பில் மானியம் வழங்கி வருகிறது 'மருந்துகள் உதவி நிதித் திட்டம்' (எம்ஏஎஃப்). இன்னும் ஓர் ஆண்டில் புற்றுநோய்க்குரிய 33 விலையுயர்ந்த மருந்துகளை அரசாங்கம் இந்த நிதித் திட்டத்தின்கீழ் சேர்க்கவுள்ளது.
இதன்படி, இத்தகைய மருந்து களுக்குக் கட்டணம் செலுத்தச் சிரமப்படுவோர், தங்களின் தனி நபர் வீட்டு வருமானத்தைப் பொறுத்து மருந்துக்கான செலவில் 75% வரை கழிவு பெறலாம்.
தற்போது இத்திட்டத்திற்கான பட்டியலில் ஆறு புற்றுநோய் மருந்து கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
காப்புரிமை பெற்றுள்ள பெரும்பாலான புற்றுநோய் மருந்துகளுக்கு மானியம் தற்போது வழங்கப்படுவதில்லை. ஏனெனில் தற்போதைய விலைக்கு ஏற்ற பலனை அவை அளிப்பதில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே சற்று விலை குறைந்த மருந்துகளுக்கு மானியம் வழங்கும் 'எஸ்டிஎல்' எனும் மற்றொரு திட்டத்தின்கீழ் மேலும் 22 புற்றுநோய் மருந்துகள் சேர்க்கப் படுவதாக அமைச்சு குறிப்பிட்டது.
எனவே, அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் 'எஸ்டிஎல்' பட்டியலில் 70 புற்றுநோய் மருந்துகளும் 'எம்ஏஎஃப்' பட்டியலில் 39 புற்றுநோய் மருந்துகளும் இடம்பெற்றுவிடும்.
சிங்கப்பூரில் புற்றுநோய்க்கான சிகிச்சை முறையை மறுஆய்வு செய்ததை அடுத்து பட்டியலில் இம் மருந்துகளைச் சேர்க்க முடிவெடுத்துள்ளது. இந்த மறுஆய்வின்படி 'மெடிஷீல்டு லைஃப்' காப்புறுதித் திட்டத்தின்கீழ் மருந்துகளுக்காக தொகை கோரும் வரம்பிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதே சமயம், புற்றுநோய் மருந்து களுக்கான விலையைக் குறைக்குமாறு அமைச்சும் வெவ்வேறு தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தென்கொரியா, ஆஸ்திரேலியா நாடுகளுடன் ஒப்பிடுகையில், புற்றுநோய் மருந்துகளுக்கு சிங்கப்பூர் கூடுதல் கட்டணத்தை மருந்து நிறுவனங்களுக்குச் செலுத்தி வருகிறது.
அறிவிக்கப்பட்டுள்ள இந்த மாற்றங்களால், மானியத்திற்குத் தகுதிபெற்றுள்ள புற்றுநோய் நோயாளிகளில் 90 விழுக்காட்டினர் காப்புறுதி, மெடிசேவ் மூலம் தங்களின் வெளிநோயாளி சிகிச்சை களுக்கான கட்டணத்தைச் செலுத்தலாம். தற்போது 70 விழுக்காட்டினர் அவ்வாறு செலுத்தி வருகின்றனர்.

