தெம்பனிஸ் சென்ட்ரலில் உள்ள ஏழு கட்டடங்களின் உரிமையாளர்கள் பொதுவான குளிர்சாதன முறை மூலம் செலவை மிச்சப்படுத்துகிறார்கள்.
தெமாசெக் நிறுவனமும் எஸ்பி குருப் நிறுவனமும் தெம்பனிசை 2025ல் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நகராக மாற்றும் முயற்சிகளில் ஒன்றாக இந்தத் திட்டத்தை நடப்புக்கு கொண்டு வந்து உள்ளன.
இது, சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030ன் ஓர் அங்கமாகவும் இடம்பெறுகிறது.
தெம்பனிஸ் மால், டெலிபார்க், செஞ்சுரி ஸ்குவெர், தெம்பனிஸ் 1, ஓசிபிசி தெம்பனிஸ் சென்டர் டு, அவர் தெம்பனிஸ் ஹப், யுஓபி தெம்பனிஸ் சென்டர் ஆகியவை அந்த ஏழு கட்டடங்கள்.
அந்தக் கட்டடங்களில் குளிர்ந்த தண்ணீர்க் குழாய்கள் பொருத்தப்படும். அவற்றின் மூலம் அந்தக் கட்டடங்களின் வெப்பநிலை குறைக்கப்பட்டு குளிர்ச்சியான சூழல் ஏற்படுத்தப்படும் என்று தெமாசெக், எஸ்பி குருப் நிறுவனங்கள் தெரிவித்தன.
இதன்மூலம் எரிசக்தி பயனீடு குறையும். செலவும் குறையும் என்று அவை கூறின.
இதனிடையே, இந்தத் திட்டம் இப்போது நடப்பில் உள்ள பல்வேறு பசுமைத் திட்டங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறினார்.
நிறுவனங்களும் வர்த்தகப் பங்காளிகளும் கைகொடுத்தால்தான் சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் பசுமை நகர் இலக்கு நிறைவேறும் என்று அவர் தெரிவித்தார்.
குடியிருப்பு பேட்டையாக மட்டுமின்றி சுறுசுறுப்பான, முதிர்ச்சியடைந்த தொழில் மையமாகவும் தெம்பனிஸ் திகழ்கிறது என்பதை, தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான திரு மசகோஸ் சுட்டினார்.
அவர் தெம்பனிஸ் ஹப்பில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று அவர் உரையாற்றினார். அதில் பல்வேறு அமைப்புகளும் எஸ்பி குருப் குழுமத்துடன் இணக்கக் குறிப்பு ஒன்றில் கையெழுத்திட்டன.
தெம்பனிஸ் சென்ட்ரலில் இப்போது உள்ள 14 கட்டடங்களை உள்ளடக்கி இத்தகைய பொதுவான குளிர்சாதன வசதியை ஏற்படுத்தும் சாத்தியம் பற்றி ஒரு வெள்ளை அறிக்கை ஆராய்ந்தது.
இந்தப் பொதுவான ஏற்பாட்டின் மூலம் ஆண்டு ஒன்றில் 1,665 வீவக மூவறை வீட்டுக்குப் போதுமான அளவுக்கு மின் பயனீட்டை 17 விழுக்காடு குறைக்கலாம் என்று அந்த வெள்ளை அறிக்கை குறிப்பிட்டது.
அதோடு மட்டுமின்றி ஆண்டுதோறும் கரிமக் கழிவும் 18% குறையும் என்று அது தெரிவித்தது. இது ஒவ்வோர் ஆண்டும் 2,250 கார்களை சாலையைவிட்டு அகற்றுவதற்குச் சமமானதாகும்.
எரிசக்திப் பயனீடு குறையும் என்பதால் கட்டட உரிமையாளர்களுக்கு ஆண்டுக்கு $4.3 மில்லியன் மிச்சமாகும்.
பொது குளிர்சாதன வசதி திட்டத்தில் இதர ஏழு கட்டடங்களையும் உள்ளடக்குவதன் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

